நடிகைகள் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை உறவினர்களிடம் பறிகொடுத்து வீதிக்கு வந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாராவில் இருந்து இப்போது நடிக்க வந்துள்ள புதுமுக நடிகைகள்வரை சம்பாதித்ததை ரியல் எஸ்டேட், கட்டுமானதொழில், நகை வியாபாரம், ஓட்டல்கள், வீடுகள் என்று புத்திசாலித்தனமாக முதலீடு செய்து மேலும் வருமானம் பார்க்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் தமிழ், தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்த பழம்பெரும் நடிகைகள் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை உறவினர்களிடம் பறிகொடுத்து வீதிக்கு வந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
ஜெயசுதா, 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் கையில் பணம் இல்லாமல் தினமும் நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை செலவு செய்து குடும்பத்தை நகர்த்தும் நிலையில் இருக்கிறார்.
இதுகுறித்து ஏற்கனவே அவர் அளித்த பேட்டியொன்றில் “அந்த காலத்தில் நடிக்க ஆரம்பித்தபோது எனக்கு எதுவும் தெரியாது. வீடு நிறைய உறவுக்காரர்கள் இருப்பார்கள். படிப்பிடிப்புக்கு சென்றுவிட்டு வரும்போது சந்தோஷமாக வரவேற்பார்கள். சினிமா விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வார் கள். ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.
நான் சம்பாதிப்பதைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்று அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்து பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். கடவுள் தயவால் எப்படியோ வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது” என்றார்.
பழம்பெரும் நடிகை காஞ்சனா சம்பாதித்த சொத்துக்களை பறிகொடுத்து வீட்டை விட்டே விரட்டப்பட்டார். பெற்றோர்களே துரோகம் செய்ததாக கூறினார். தலைமறைவாக வாழ்ந்து பிறகு கோர்ட்டு மூலம் கொஞ்சம் சொத்துகளை மீட்டார். நடிகை மஞ்சுளாவுக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் சொத்து தகராறு நடந்தது.
நடித்து சம்பாதித்த சொத்துகளை அனுபவிக்க முடியாமல் 2004-ல் விமான விபத்தில் இறந்துபோனார் சவுந்தர்யா. அவருடைய சொத்துகளை பங்கிடுவதில் உறவினர்கள் இடையே மோதல் நடக்கிறது. சவுந்தர்யாவின் அண்ணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இன்னும் அது விசாரணையில் இருக்கிறது.
நடிகையர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சாவித்திரி வாழ்க்கையும் இப்படித்தான். வீட்டிற்குள் நீச்சல் குளம் கட்டிய முதல் நடிகை என்ற பெயருடன் ஆடம்பரமாக வாழ்ந்த அவர் கடைசி காலத்தில் எல்லா சொத்துகளையும் இழந்து வறுமையில் இறந்தார். மலையாள பட உலகை வசூலில் ஆட்டிப்படைத்த ஷகிலாவும் சொத்துகளை உறவினர்களிடம் பறிகொடுத்து நிற்கிறார்.
இப்போது நடிகை சங்கீதாவும் தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்துகளை பறிக்க தாய் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். 13 வயதிலேயே படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பி வெற்று காசோலைகளில் கையெழுத்து வாங்கி போதை மகன்களுக்காக தன்னை சுரண்டியதாக அவரது தாய் மீது குற்றம் சாட்டி உள்ளார்.