கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன், குண்டு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஸஹ்ரான் என்பவருக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று, அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மத் (காஸிமி) தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு, கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் நேற்று (26) மீராவோடை தாருஸலாம் பள்ளிவாசலில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஸஹ்ரான் என்பவருக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தவித தொடர்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடையாது. அவரைப் பற்றி ஊடகங்கள் வாயிலாகத்தான் நாங்களும் அறிந்து கொண்டுள்ளோம். எங்கள் அமைப்பிற்கும் அவரது அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இப்பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முழு இலங்கை முஸ்லிம்களும் மிகவும் கவலையுற்று, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எம்முடன் விரோதம் கொண்ட சிலர், இப்பயங்கரவாதச் செயலுடன் எம்மைச் சம்பந்தப்படுத்திப் பேசியும் எழுதியும் வருவதுடன், ஒரு சில இணையத்தளங்களில் எமது புகைப்படங்களைப் பிரசுரித்து நாம் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அரசினால் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தி, நாம் தலைமறைவாக இருந்து வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
சிலர் சமூக வலைத்தளங்களிலும் இவற்றைப் பரப்பி வருகின்றனர். ஊடகங்கள் மிகுந்த சமூகப் பொறுப்புடனும் ஊடக தர்மத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு சிலரின் விருப்பு, வெறுப்புக்களையும், காழ்ப்புணர்வுகளையும் வெளிக்கொணரும் தளமாக ஊடகங்களைப் பயன்படுத்துவது மிகவும் அநீதியாகும். இந்த வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் குறித்த இரு இணையத்தளங்களையும் நாம் கண்டிக்கின்றோம்.
இந்த ஊடகங்கள், ஊடக தர்மங்களை காப்பாற்றப் பணியாற்ற வேண்டும், பொய்யான தகவல்களைப் பரப்புதல் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளை இந்த ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இத்தகைய ஊடகங்களுக்கு எதிராகவும் இவற்றுக்குப் போலியான செய்திகளை அனுப்பிவைத்து குளிர்காயும் செய்தியாளர்களான சமூக விரோதிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கேட்டுக்கொள்கின்றது
வணக்கஸ்தலங்களில் தாக்குதல் மேற்கொள்வதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் போன்றோரை யுத்தத்தில் கூட தாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதும், மனித நேயத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானதுமான செயற்பாடுகளாகும்.
இத்தாக்குதலில் மரணித்த உறவுகளின் குடும்பங்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் சார்பில் ஆறுதல் கூறுவதுடன், இத்தகைய தீவிரவாத சிந்தனைகள் இஸ்லாத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் இத்தகைய தீவிரவாத சிந்தனை கொண்டோரின் கொள்கைகளை நாம் வன்மையாக கண்டித்துள்ளோம்.
எனவே, நமது நாட்டின் பாதுகாப்பு அபிவிருத்தி சகவாழ்வு என்பவற்றைக் கருத்திக் கொண்டு அனைவரும் இலங்கை பிரஜைகள் என்ற நோக்கில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம் என்றும் தெரிவித்தார்.