கொழும்பு உட்பட இலங்கையின் பல இடங்களில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக முறையான விசாரணையை தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்தச் சம்பவம் குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டன.
அதன்படி ஏப்ரல் 21ஆம் திகதி இரவு தொடங்கி ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்சப், யூடியூப், ஸ்னாப்சேட், வைபர் போன்றவற்றின் சேவைகள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும், போலிச் செய்திகளின் பரவலும் குறைவு என்பதால் அதன் சேவை முடக்கப்படவில்லை.
குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக சமூக ஊடகங்கள் முடக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் கூறினாலும், இணையத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கோ அதுகுறித்த தகவல்களை வெளியிடுவதற்கோ அவர்களுக்கு களம் அமைத்து கொடுத்து விடக் கூடாது என்றும் அரசு கருதியிருக்கக் கூடும்.
உலகம் முழுவதும் எந்த நாட்டில் அல்லது பகுதியில் எப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் ஒடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் மூலம் சமுதாயத்தின் குரல் நசுக்கப்படுவதாக எதிர்ப்புகள் எழுவது வழமை. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பெரும்பான்மையானோர் ஆதரித்தே வருகின்றனர்.
உதாணமாக, இதற்கு முன்பு வரை வதந்திச் செய்திகள் விவகாரத்தில் சமூக ஊடக நிறுவனங்களை எதிர்த்து எழுதி வந்த நியூேயார்க் டைம்ஸ் நாளிதழின் தொழில்நுட்ப செய்தியாளர் காரா ஸ்விசர், இலங்கை அரசின் தற்போதைய நடவடிக்கையை அறிந்தவுடன் தான் அதை வரவேற்றதாகத் தெரிவிக்கிறார்.
ஏனெனில், தற்போது மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாக உருமாறி வரும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான போலிச் செய்திகளை ஒடுக்காவிட்டால், அது சமூகத்தில் மேலதிக பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.
அதே சமயத்தில் இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது இது முதல் முறையல்ல. சென்ற ஆண்டு கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன.
இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு பிறகு இடம்பெற்ற இந்த மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் குறித்த போலிச் செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் முழுமையான பலனை தந்ததா என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டும்.
ஒரு நாட்டில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் இணையதள சேவை முழுவதுமாக முடக்கப்படாத பட்சத்தில், முடக்கப்பட்ட இணையதளங்களை மட்டும் பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில், இலங்கையில் தற்போது முடக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக், வாட்சப் போன்ற செயலிகளை தந்திரமான முறையில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ள நிலையில்,பிரபல செயலி அந்நாட்டில் தடைசெய்யப்பட்டிருப்பதாக அந்த இணையத்தை கண்காணிக்கும் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மற்ற செயலிகளை தடை செய்தால் போலிச் செய்திகளின் பரவலை குறிப்பிடத்தக்க அளவுக்கு தடுக்க முடியும்.ஏனென்றால் தீவிரவாதத்தை பரப்பும் களமாக சமூக ஊடகங்கள் அமைந்து விட்டதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான போலிச் செய்திகளின் பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு ஆதரவாக ஒரு சில உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவதாக, மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டின் பெரும்பான்மையினர் மேற்கொண்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு தொடர்ந்து அகதிகளாக சென்றனர்.
இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்களைப் பற்றி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட போலி மற்றும் வெறுப்பை உண்டாக்கும் செய்திகளே காரணம் என்று பி.எஸ்.ஆர் என்னும் அமைப்பு தனது 60பக்க அறிக்கையை கடந்த ஆண்டு வெளியிட்டது.
இதுதொடர்பாக, ஃபேஸ்புக் வெளியிட்ட பதிவில், மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதலை கட்டுப்படுத்துவதில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டதுடன், அந்நாட்டில் தாங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டது.
இரண்டாவதாக, கடந்த மாதம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 50பேர் உயிரிழந்ததில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.
ஏனெனில், கிரைஸ்ட்சர்ச் தாக்குதலை நடத்திய நபர் அதை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பினார். அந்தக் காணொளியை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டறிந்து நீக்குவதற்குள் அது பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது.
இதன் மூலம், தாக்குதலாளியின் ஃபேஸ்புக் நேரலை செய்ததன் நோக்கம் நிறைவேறியதாகவும் அதை விரைந்து தடுப்பதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் தவறிவிட்டதாகவும் பரவலான கருத்துகள் எழுந்தன.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து பொலிஸ்துறையினர் தங்களுக்கு தெரிவித்தவுடன், அந்த காணொளியையும், அதை ஒளிபரப்பிய பயன்பாட்டாளரின் கணக்கையும் நீக்கிவிட்டதாக ஃபேஸ்புக் அறிவித்திருந்தது.சமூக ஊடகங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஒன்றாக கலந்து விட்ட நிலையில், இவ்வாறான போக்குகளை நிறுத்துவதற்கு மற்றும் விரைந்து கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தின் கீழ் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் இருக்கின்றன.
சாய்ராம் ஜெயராமன்
(பி.பி.சி தமிழ்)