ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே ஈரானில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையிலான அணுஆயுத ஒப்பந்தம் முடிந்ததன் விளைவாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.
எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு செயலர் மைக் பாம்பியாவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அமெரிக்கா எந்தவித முடிவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எந்தெந்த நாடுகளில் இருந்து எவ்வளவு இறக்குமதி?
2018-19-ம் ஆண்டுகளில் ஈராக்கில் இருந்துதான் இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஈராக்கிடம் இருந்து 46.61 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக சவுதி அரேபியாவில் இருந்து கடந்த நிதியாண்டில் 40.33 மில்லியன் டன் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கியதில் ஈரான் 3-ம் இடத்தில் உள்ளது. கடந்த நித்தியாண்டில் இந்தியா ஈரானிடம் இருந்து 23.90 மில்லியன் டன் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது.
அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 17.49 மில்லியன் டன்னும், வெனிசுலாவில் இருந்து 17.32 மில்லியன் டன்னும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நைஜீரியாவிலிருந்து 16.83 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யும், குவைத்திலிருந்து 10.78 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இருந்துதான் அமெரிக்கா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டில் அமெரிக்கா இந்தியாவிற்கு 6.40 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.