இன்று (03.05.2019) முக்கியம் பெற்ற இலங்கை செய்திகள்

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டனர்.

கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

———–

யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி இன்று (03) பாதுகாப்பு நிமிர்த்தம் சோதனை செய்யப்பட்டது.

அதிகாலை 5 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந சோதனை நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த கால போர் சூழலில் யாழ். பல்கலைக்கழகமானது பாதுகாப்பு தரப்பினரால் உன்னிப்பான கவனத்தில் இருந்த ஒரு வளாகமாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வரையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் ஏதும் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ள நிலையில் இராணுவும் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருந்த சூழல் நிலவியது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலினை தொடர்ந்து நடைமுறைப்புடுத்தபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் தற்போது யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மீண்டும் இராணுவம் உள்நுழைக்கபட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகளின் நிமிர்த்தம் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஊழியர்கள் தமது கடமை நேரத்திற்கு சற்று முன்னதாக சமூகமளித்த நிலையில் ஒவ்வவொரு பீடங்களும் அதனுள் உள்ள விரிவுரைக் கூடங்களும் தனித்தனியாக சோதனை இடப்பட்டது.

வளாகத்திற்குள் உள்நுழையும் ஊழியர்களின் பைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஊழியர்கள் வளாகத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கபட்டனர்.

நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் இருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அடுத்த சில தினங்களில் பல்கலைக்கழக கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

———–

நாட்டின் தென் பகுதியிலிருந்து வெடி மருந்துகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்களை ஏற்றிய 20 வாகனங்கள் வடக்கிற்கு வந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கமைய வடக்கில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி வவுனியாவில் நான்கு வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த பாதுகாப்பு தடைகள் நான்கும் இரவு பகலாக செயற்படுவதோடு வவுனியா நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான 20 வாகனங்களின் இலக்கங்களும் தகவல்களும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு அரண்களின் அந்த வாகன இலங்கங்களின் ஆவணங்களை ஒப்பிட்டு சோதனை நடத்தப்படுகின்றது.

இவ் வாகனங்களில் 12 மோட்டார் சைக்கிள்கள் ஒரு முச்சக்கர வண்டி, இரண்டு வான்கள், பட்டா லொறியொன்றும் இரண்டு கார்கள், இரண்டு கப் வாகனங்களும் அடங்குகின்றன. வட மாகாணத்திற்கு நுழையும் ஏ9 பாதையில் வவுனியாவின் நுழைவாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடியில் இந்த இலக்கங்களைக் கொண்ட போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் ஹொறவ்பத்தான பாதை தாண்டிக்குளம், இரட்டை பெரியகுளம் என்னும் இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தவிர வட மாகாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகங்களும் சோதனையிடப்பட்டு அவற்றைப் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வன்னி பாதுகாப்புப் படை தலைமையக இராணுவ வீரர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

————

யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்துள்ளனர்.

யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள மாணவர் விடுதி என்பன இராணுவம் , பொலிசாரினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சுற்றி வளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.

அதன்போது கலைப்பீட மாணவர் ஒன்றிய அலுவலக சோதனையிடப்பட்ட போது அதனுள் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன மீட்கப்பட்டன.

அவை தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரை இராணுவத்தினர் கைது செய் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரையும் கோப்பாய் பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை மாணவர் விடுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , விடுதியில் இருந்து இராணுவத்தினர் அணியும் சப்பாத்தை போன்று தோற்றமுடைய ஒரு சோடி சப்பாத்து , மற்றும் தொலைநோக்கி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

———–

அப்புத்தளைப் பொலிசார் மேற்கொண்ட சுற்றி வலைப்புத் தேடுதலின்போது சட்டவிரோதமான வகையில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவரை அப்புத்தளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவருக்குரியதான லொரியொன்றை கண்டுபிடித்து அந்த லொரியிலிருந்த பெருந்தொகையான செப்புக்கம்பிகள் மற்றும் பெருமளவிலான வயர்களும் மீட்கப்பட்டன.

அப்புத்தளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே மேற்படி சுற்றி வலைப்புத் தேடுதல்கள் இடம்பெற்றன.

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அப்புத்தளைப் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Related posts