யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துனரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ பீடத்துக்கான சிற்றுண்டிச் சாலையும் சோதனையிடப்பட்டது. அங்கு திலீபனின் உருவப்படம் மீட்கப்பட்டுள்ளது. அதனால் சிற்றுண்டிச் சாலையை நடத்துபவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அறிக்கையிடப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
————-
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் கல்வி நடவடிக்கைக்காக பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது சம்பந்தமாக ஆணைக்கழுவுக்கு அறிவிக்குமாறு துணை வேந்தர்களுக்கு றிவித்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறினார்.
அதன்படி அது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதாக அவர் கூறினார்.
இதேவேளை பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு சிறந்த சூழல் இல்லை என்று அதிபர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்று அந்த சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமரத்ன கூறினார்.
———-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையானஅதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திரு.விக்னேஸ்வரன், நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரைத் தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து இராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் ஒரு துன்பியல் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முற்பட்டுள்ளதை அறியாதிருக்கும் இவர்கள் மேல் பரிதாபம் மேலோங்குகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது.
இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.
————
யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைத்தேய நாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 1997ஆம் ஆண்டு முதல் பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிரவும் சர்வதேச நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
மேலைத்தேய நாடுகள் உலகம் முழுவதிலும் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன. இலங்கையிலும் அவர்களின் இந்த நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிரியாவில் அரசியல் ரீதியான குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவினாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்பொழுது இலங்கையில் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்தது முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் போன்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவுமே செயற்பட்டனர். அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் அரசியலிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரும் அவர்களின் செயற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. எவரும் பொறுப்பெடுக்காமல் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதே காணப்படுகிறது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல்களும் முன்பின் முரணானவையாகக் காணப்படுகின்றன. பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதி மீண்டும் அப்பதவியில் இருப்பதற்கு கனவு காண்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னால் நெருங்கமுடியாமிலிருக்கும் ஜனாதிபதி ஆசனத்தை நெருங்குவதற்கு கனவு காண்கின்றார். இவர்கள் கனவிலிருந்து விழிக்கும்போது நாடு ஸ்திரமற்ற மோசமான நிலைக்குச் சென்றுள்ளதுடன், நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் உச்சம்பெற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றுவிட்டது. சுமார் 10 முதல் 12 வருடங்களாக இதற்கான ஆரம்பத்தை பயங்கரவாதிகள் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற அடிப்படைவாத அமைப்பு நாட்டில் செயற்படுகிறது என்பது தெரிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. சர்வதேச நாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அமைப்பில் பயிற்சிபெற்று நாடு திரும்பியவர்களை தடுப்பதற்கு சட்டம் இன்னமும் இல்லையென பிரதமர் கூறியுள்ளார். அவ்வாறு சட்டமொன்று இல்லாவிட்டால் அதனை பாராளுமன்றத்தில் இயற்றவேண்டிய கடப்பாடு பிரதமருக்கு உள்ளது.
இலங்கையில் மதரீதியான அடிப்படைவாதம் இருக்குமாயின் அதனை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவற்றை இல்லாமல் செய்வதற்கான கட்டளைகளை அரசாங்கம் உரிய தரப்பினருக்கு வழங்கியிருக்க வேண்டும். யாருக்காவது தண்டனை வழங்க வேண்டுமாயின் சட்டப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கமாட்டார்கள். உடனடியாக பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள்.
பிரதமர் மாத்திரமன்றி ஜனாதிபதி மைத்திரிபாலவும் பொறுப்பேற்க வேண்டும். தாக்குதல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாகவே தெரிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை பறைசாற்றுகிறது என்றார்.