கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ,செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ், யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.
ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை மாணவர்களின் விடுதலைக்குரிய நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.