ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 13 பேர் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைக் குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (12) மற்றும் நேற்று (13) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்க இன்று (14) கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்தபோதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடமம், மார்ச் மாதமளவில் திகன, தெல்தெனிய முஸ்லிம் பிரதேசங்களில் கலவரத்தை ஏற்படுத்தி, வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் 7 மாதங்களின் பின்னர் அமித் வீரசிங்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.