தமிழ் திரையுலகினருக்கு புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்கள் பெரிய தலைவலியாக உள்ளன. படங்கள் திரைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே இணையதளங்களிலும் வெளியாகி விடுகின்றன. இதனால் வசூல் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை திரைக்கு வந்த உடனேயே இணையதளங்களில் பார்க்க முடிந்தது. இதை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் பலன் இல்லை.
சமீபத்தில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணே கலைமானே, எல்.கே.ஜி. உள்பட அனைத்து படங்களும் இணையதளங்களில் வெளியானது. தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து 2-ம் பாகமாக தயாராகி வெளியான என்.டி.ஆர் மகாநாயுடு படமும் இணையதளத்தில் வெளிவந்தது.
2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு ஹாலிவுட்டை அதிர வைத்தனர். இந்த நிலையில் தற்போது விஷால் நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் அயோக்யா முழு படமும் இணைய தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை பதிவிறக்கம் செய்து பலரும் பார்க்கிறார்கள்.