தமிழை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் படம் இயக்கி வருகிறார், கே.எஸ்.ரவிகுமார். ஏற்கனவே பாலகிருஷ்ணா நடித்திருந்த ஜெய்சிம்ஹா படத்தை இயக்கிய அவர், தற்போது மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, ‘தமிழில் முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏழெட்டு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் படத்துக்கு டைட்டில் மற்றும் ஹீரோயின் முடிவாகவில்லை. அடுத்த மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. நான்கு மாதங்களில் இந்த படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
—————-
தமிழில் திரைக்கு வந்த ஜோக்கர், சகா, மேற்குத்தொடர்ச்சி மலை ஆகிய படங்களில் நடித்து இருந்தவர், மலையாள நடிகை காயத்ரி கிருஷ்ணன். தற்போது ஜீவா தங்கையாக சீறு என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கும், ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் திருமணம் வரும் 19ம் தேதி காலை பத்து மணியளவில் கேரளாவிலுள்ள குருவாயூரில் நடைபெறுகிறது. இதுபற்றி காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:
எங்கள் குடும்பத்துக்கு 16 வருட நண்பர் ஜீவன் ராஜ். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிப்பதி வாளராக பணியாற்றுகிறார். நாங்கள் காதலர்கள் கிடையாது. நண்பர்களாக பழகி வந்தோம். எனவே, இருவீட்டு பெற்றோரும் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். நாங்கள் சம்மதித்தோம். வரும் 19ம் தேதி திருமணம் நடக்கிறது. 22ம் தேதி திருவனந்தபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி சீறு படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன்.
———–
ஆரம்ப கட்டத்தில் கால்ஷீட் பிரச்னை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார், இயக்குனர் தேடல் என கலாட்டாவுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் நல்லபடியாக நடந்து முடிந்து யூ சான்றிதழுடன் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹிப் ஆப் ஆதி இசை அமைத்திருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதில் நடித்ததுபற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது,’மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரித்திருக்கும் ஞானவேல் ராஜாவிடம் பேசியபோதுதான் அவர் எவ்வளவு பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
சிக்கலான நேரத்தில் நான் நடித்துக் கொடுத்தது பற்றி மேடையிலேயே வெளிப்படையாக குறிப்பிட்டார். அதுபோன்ற உண்மையை நிறையபேர் சொல்வதில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை எனக்கு அமைத்து கொடுத்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ். அந்த நன்றிக்காக இல்லை. அவரது இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் இப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. நான் நடித்த வேலைக்காரன் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார்.
திறமையான நடிகையான அவருக்கு அப்படத்தில் நடிப்பதற்கு போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்ற கவலை என் மனதில் இருந்தது. அந்த குறை இப்படத்தில் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஹீரோயினாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அவரை தவிர வேறு யாரும் இந்தளவுக்கு அந்த பாத்திரத்தை செய்ய முடியாது.
ஹிப் ஆப் ஆதி இசை அமைப்பாளர் என்றவுடன் பயந்தேன். அவரே ஹீரோவாக நடிக்கிறார். நல்ல பாடல்களை தன் படத்துக்கு எடுத்துக்கொள்வாரோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அப்படியில்லை. எந்த படத்துக்கு எப்படி பாடல் அமைக்க வேண்டும் என்பதற்கேற்ப அருமையான பாடல்கள் தந்திருப்பதுடன் எனக்காக பாடலும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘நீ நெனச்சா..’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கும் பாடலாக அது இருக்கிறது’ என்றார்.