நிலையில்லா இளமையும் நிலையான தேவனும். (உன் சிருஸ்டிகரை நினை)
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
இளவயதும் வாலிபமும் மாயையே. பிரசங்கி 11:10.
இன்றைய சிந்தனையை விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப்பகுதியை தியானத்தோடு வாசிப்போம். வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் ப10ரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட ஆனாலும் இவை எல்லாவற்றின் நிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும் வாலிபமும் மாயையே. வச. 9-10.
அண்மையில் இலங்கையில் நடந்த துயரசம்பவத்தில் பல இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்த்தமற்ற சிந்தனைமூலமுமாகவும், கொடியசெயலின்மூலம் பல உயிர்களையும் பலகோடி பெறுமதியான சொத்துக்களையும், பலரின் வாழ் வாதாரங்களையும் அழித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறான அழிவில் இருந்து இளைஞரைக் காத்துக் கொள்ளும்படியாக வேதம் இவ்வாறு சொல்கிறது, வாலிப வயதிலே உன் சிருஸ்டிகரை நினை என்று.
வாலிபம் என்பது வாழ்க்கையின் ஒருபருவமே தவிர வாலிபம்தான் வாழ்க்கையல்ல. மானிட வாழ்வில் எந்தப்பருவம் சந்தோசத்தைக் கொடுக்கிறது? குழந்தைப்பருவமா? வாலிபப்பருவமா? முதுமைப்பருவமா? இப்படியாக ஓர் பட்டி மன்றம் நடப்பதை விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன். மூன்று பருவமும் இனிமையானது என மூன்று குழுவினரும் வாதிட்டனர். அதில் வாலிபப்பருவத்தை மிகவும் திறமையாக வாதிட்ட வாலிப சகோதரி கூறியது இன்றும் என் நினைவில் நிற்கிறது. வாலிபம் இல்லை ஆனால் வாழ்வே இல்லை என்றாள்.
அண்மையில் டென்மார்க் தொலைக்காட்சியில் வெளியான வெளிநாட்டு இளைஞர்களிளின் வளர்ச்சி பற்றிய ஆய்வில் தமிழ் இளைஞர்களின் வளர்ச்சிபற்றிய ஓர் அவதானிப்பை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மிகவும் பாராட்டத்தக்கது. அதே நேரம் தமது இளம் பிள்ளைகளைக் குறித்து கலங்கி துயரத்துடன் வாழ்ந்துவரும் பலகுடும்பங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
முதலில் நாம் அறிந்திருக்க வேண்டியது, பருவங்களைப் பிரித்து பார்ப்பது தவறு என்று. எல்லாப் பருவங்களும் மனுசவாழ்வில் வளர்ச்சிப்படிகளே. நாம் எதையும் பிரித்து பார்க்கக்கூடாது. அதினதின் காலத்தில் கர்த்தர் சகலத்தையும் நேர்த்தி யாகவும், செய்திருக்கிறார். வாலிபமும் அதன் காலத்தில் அழகானதும் நேர்த்தி யானதும்தான். ஆனால் வாழ்கையை, நாம் நேர்த்தியாக வாழும் வரைக்கும்தான் அது நேர்த்தியாகவும் அழகாக இருக்கும். அந்தக் காலம்முடிய அது மாறும். இதுதான் உலக இயல்பு.
நாம் வாலிப பருவத்தையுடையவர்கள் என்ற எண்ணத்தில் வாழ முற்படும்போது பலவேதனைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. வாலிபப்பருவம் பலருக்கு ஓர் விக்கிரகமாக மாறியுள்ளதையும் மறைக்க முடியாது. பல இளைஞர்கள் தமது அறியாமையால் வாழ்க்கையை சூனியமாக்கியுள்ளனர். காரணம் முதியவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மனதற்று வாழ்வதனால்.
அனுபவமும் சிந்தனையும் என்ற ஓர் சிந்தனைக் கட்டுரையில் வாசித்த பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பறவைகள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு இடங்களில் கூடுகளைக்கட்டி வைத்திருக்கும். இவைகள் எல்லாவற்றிற்கும் பொதுவான இருதன்மைகள் உண்டு. முதலாவது அக்கூடுகள் எதுவுமே நிதந்தரமா னதாக இராது. கூடுகள் தற்காலிகமானதே. இரண்டாவது குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறியதும் அது (கூடு) கவனிப்பார் அற்றுப்போய்விடும்.
மீண்டும் முட்டையிடும் காலத்தில்தான் வேறொரு கூடுகட்டப்படும். கூடுகள் குஞ்சுகளின் பராமரிப்புக்குத்தான். குஞ்சுகள் வளர்ந்து வரும்போது பாதுகாப்பு, புகலிடம் வழங்க கூடுபோதாது. குஞ்சுகள் வளரும் போது தாய்ப்பறவைகள் கூட்டைப் பிரித்து சிறிதாகவோ, வசதியற்ற நிலைக்கு கொண்டுவரும். கூட்டுக்குள் இருந்து தாயிடம் உணவு பெற்று வாழ்ந்த குஞ்சுகளுக்கு, சிறகடித்து பறந்து உணவைத் தேடுவது மிகவும் கடினமான காரியமாகும். அவைக்கு கூட்டுக்குள் இருக்கத்தான் ஆசைப்படும். ஆனால் குஞ்சுகள் வெளியேறித்தான் ஆகவேண்டும். அப்போதுதான் தாய் பறவையால் மட்டுமல்ல தம்மாலும் பறக்கமுடியும் என்பதை அவை கண்டுகொள்ளும். பறப்பதுதானே பறவைகள் என்ற இலக்கணத்திற்குப் பொருந்தும்.
வேதம் இவ்வாறு மிகஅழகாக கூறுகிறது. வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய். மனுஷன் தனக்குப்பின் வருவ தொன்றையும் கண்டுபிடியாதபடிக்குத் தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார். பிரசங்கி 7:14. வாழ்வு காலம் என வேதம் வர்னிக்கும் இன்பகாலமும், தாழ்வுகாலம் என வர்னிக்கும் துன்பகாலமும் அப்படித்தான். ஆனால் மனித விருப்பம் எப்போதும் இன்புற்றிருப்பதே. பணம், பொருள், உடமைகள், ஆரோக்கியம் என்பவற்றை எல்லாம் உறுதியாக்கி துன்பம் இல்லாத வாழ்வு வாழ எமது மனம் துடிக்கும்.
ஆனால் இன்பகாலம் நிரந்தரமானதல்ல. துன்பகாலம் உண்டு. துன்பகாலம் தேவை. இன்ப காலத்தையும் துன்ப காலத்தையும் தேவன் ஒன்றுக்கொன்று முரணானதாக ஏற்படுத்தி வைத்துள்ளார். காரணம் துன்பகால அனுபவங்கள் தான் எம்மை எதிர்காலத்தில் இன்பம் கொடுக்கிறவர்களாக மாற்றும். இன்ப காலத்தில் அல்ல, துன்ப காலத்திற்தான் தேவனைப்பற்றியும், தேவனுடைய காரியங்களைப் பற்றியும் மனவிருப்புடன் அறிய, சிந்திக்கத் தூண்டும். தேவனை கிட்டிச்சேர வழிவகுக்கும். துன்பகால அனுபவம்தான் அவரே அல்லாமல் எம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்த்தி நிற்கும். அதுதான் மனிதன் என்ற இலக்கணத்திற்குப் பொருந்தும்.
அன்பான அலைகள் வாசக நேயர்களே, ஒரு தாயின் வயிற்றில் எலும்புகள் எப்படி உருவாகிறது என்று நீயோ நானோ அறிவோமா? இல்லவே இல்லை. ஆனால் அதை உருவாக்கிய தேவன் அறிவார். உனக்கு விளங்குகிறதோ இல்லையோ இன்றிலிருந்து பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க ஆரம்பி. நீ ஆரம்பி தேவன் கற்றுத்தருவார். வயது சென்ற பிற்பாடு, அன்று இப்படியாக வாசிக்க ஆரம்பித்திருக்கலாமே என்று கவலைப்படுவதில் பலன் இல்லை.
வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியின் இரகசியம் தேவனோடு நாம் வைத் திருக்கும் அந்த அன்பின் உறவிலே தங்கியுள்ளது. அந்த உறவு அவரின் வார்த்தையிலே தங்கியிருக்கிறது. அந்த உறவுக்குள்வர உன்னை ஒப்புக்கொடுப்பியா? அப்படியானால் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடு.
அன்பின் பரலோக பிதாவே, நிலையில்லாத இந்த உலகத்தில் நிலையான தேவனாகிய உம்மைப்பற்றியும், உமது வேதத்தைப்பற்றியும் அறிய உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. வாழ்வு காலத்தில் மெய்யாய் இன்புற்றிருக்கவும், தாழ்வு காலத்தில் கருத்துடன் உம்மையே சார்ந்து வாழவும், எனக்கு கற்பித்துத் தந்து, என்னைக் காத்து வழி நடத்தும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டிநிற்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!