கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்க செயற்குழு நிராகரித்த போதிலும், பதவி விலகும் தனது முடிவை மாற்றிக் கொள்ள காங்., தலைவர் ராகுல் தயாராக இல்லை என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் காங்., பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக ராகுல் சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து காங்., செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட போது, ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் ராகுலின் முடிவை ஏற்க மறுத்தனர்.
இருந்தும் தனது மனதை மாற்றி கொள்ள ராகுல் மறுப்பு தெரிவித்து வருவதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை புதிய தலைவராக தேர்வு செய்யும்படி கட்சியினரிடம் ராகுல் கூறி உள்ளாகவும், தேர்தல் தோல்விக்கு ராகுலை கட்சி நிர்வாகிகளோ அல்லது கட்சி நிர்வாகிகள் மீது ராகுலும் காரணம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.
ராகுலின் இந்த முடிவிற்கு சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் ராகுல் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சமீபத்தில் நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட இளம் தலைவர் ஒருவர் கூறுகையில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் வெறும் பேச்சுக்கு கூறவில்லை. அவர் தற்போதும் தனது முடிவில் திடமாக உள்ளார்.
கட்சியினர் கொடுத்த அழுத்தத்தால் அவர் ராஜினாமா முடிவிற்கு வரவில்லை. அவர் எப்போதும் தன்னிச்சையாக திடமாக முடிவு எடுக்கக் கூடியவர். கட்சியினரிடம் அவர் கூறுகையில், நேரு – இந்திரா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் கட்சி தலைமைக்கு தேவை என்று இல்லை. எங்களை குடும்பத்தை சேராத மற்றொருவரிடம் கட்சி தலைமையை ஒப்படைக்க நினைக்கிறேன்.
நான் எங்கும் சென்று விடபோவதில்லை. தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக போராடுவேன். நீங்கள் எனது தலைமை மீது நம்பிக்கை வைத்திருந்தால், கட்சியில் எந்த பொறுப்பையும் வகித்து நான் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். இவ்வாறு அந்த தலைவர் தெரிவித்தார்.
————–
இந்தமுறையும் மத்தியில் அமையும் ஆட்சிக்கு தமிழகத்தின் தயவு தேவையில்லை. இதனால், ஆட்சியில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை. எனவே, தமிழகத்தின் குரல் இந்திய அரசின் முடிவுகளில் எதிரொலிக்க எந்த வாய்ப்புமின்றி, தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான ‘தீர்ப்பு’ இந்த முறையும் பயனற்றுப் போகிறது. இதற்கு இந்தியாவின் மனநிலையோடு சேர்ந்து சிந்திக்காமல், தமிழகம் மட்டும் தனியாக சிந்திப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
————-