எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ் தலைவர்களை பாராளுமன்றத்திலிருந்து விரட்டி ஆயுதக் குழுக்கள் தலைதூக்குவதற்கு வழியேற்படுத்தியதுபோன்றதொரு நிலையை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திவிடக் கூடாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல் நம்பிக்கையில்லா பிரேரணையினை முன்னெடுப்பது அடிப்படையற்றது என்றும் அவர் கூறினார்.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைக் குறிப்பிட்டார்.
1983ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை அப்போதைய ஆளும் கட்சியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்திலிருந்து விரட்டியது. மகஜன கட்சியைச் சேர்ந்த நாம் அப்போதே அதனை எதிர்த்திருந்தோம். அதன் பின்னரே தமிழ் ஆயுதக் குழுக்கள் வலுப்பெற்றன. பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றவர்கள் உருவாகி ஆயுதங்களினால் பேசத் தொடங்கினார்கள். சிங்கள கடும்போக்குவாதத் தலைவர்களை தமிழ் ஆயுததாரிகள் எதுவும் செய்யவில்லை. எம்மைப்போன்று மிதவாத சிங்களத் தலைவர்களையே இலக்குவைத்தனர்.
அதுபோன்று ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் தலைவர்களை பாராளுமன்றத்திலிருந்து நீக்கி பயங்கரவாதிகள் உருவாவதற்கு வழி ஏற்படுத்திவிடக்கூடாது. மீண்டும் சிங்கள மிதவாதத் தலைவர்களை இலக்குவைக்கின்றனர். ஒரு இனவாதத்தினால் மற்றுமொரு இனவாதம் பலப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
தவறுசெய்த எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவுக்குச் சென்று சதொச நிறுவனத்துக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆட்சிமாற்றத்துக்கு முயற்சித்தவர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கு முயற்சித்தனர். எனினும், முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக இருந்தமையால் எவரும் எதிர்க்கட்சிபக்கம் செல்லவில்லை. அன்று ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் சென்றிருந்தால் இன்று எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அரசாங்கத்தை முன்கொண்டு சென்றிருப்பார்கள்.
தற்பொழுது அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் நோக்கத்தைக் கொண்டது எனவும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
——
கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறே கைது செய்யப்பட்டுள்ளார்.
——-
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் அதனை முசலி பிரதேச சபை வன்மையாக கண்டிப்பதாகவும் முசலி பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக இன்று (28) நிறைவேற்றப்பட்டது.
முசலி பிரதேச சபையின் தவிசாளர் எம். சுபியானால் இன்று (28) காலை இடம்பெற்ற சபை அமர்வின் போதே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆதரவளித்ததனால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
——–
இலங்கையில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ள நிலையில், சுவிற்ஸர்லாந்து தனது நாட்டு மக்களுக்கான பயணத்தடையை நீக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, இலங்கைக்கான சுற்றுப் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்த்து.
எவ்வாறாயினும், தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் உரிய முறையில் பாதுகாப்பை கடைப்பிடிக்குமாறு சுவிற்ஸர்லாந்துஅரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
—–
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு இன்று (28) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு பௌத்த மத பீடங்களின் மகா நாயக்கர்களை சந்தித்துள்ளனர்.
இந்நிகழ்வின் போது அஸ்கிரிய பீடத்தின் மகா நாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்ததுடன் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தலைமைத் தேரரை சந்தித்ததுடன் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், கட்சியின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் என கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.