ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011-ல் திரைக்கு வந்து வசூல் அள்ளிய காஞ்சனா படம் தற்போது இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அக்ஷய்குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்க லாரன்சையே ஒப்பந்தம் செய்தனர்.
படப்பிடிப்பு சில நாட்கள் முடிந்த நிலையில் லாரன்சுக்கும், தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காஞ்சனா இந்தி படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்தார். தன்னை அவமரியாதை செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அக்ஷய்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் லாரன்சை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்தி காஞ்சனாவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சுமி பாம் படத்தில் இருந்து நான் விலகுவதாக கூறியதும் அக்ஷய்குமாரும் ரசிகர்களும் படத்தை இயக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் அன்பில் திக்குமுக்காடினேன். கடந்த ஒரு வாரமாக ரசிகர்களைப்போல் நானும் வருத்தத்தில் இருக்கிறேன். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள். சுயமரியாதைக்கு பாதிப்பு இல்லாமல் வேலை செய்வதாக இருந்தால் எனது முடிவை மறுபரிசீலனை செய்வது பற்றி யோசிப்பேன்” என்று கூறியுள்ளார். அடுத்த வாரம் சமரச பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.