கடந்த 2015 – 2018ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. அப்போது தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர்.
சமீபத்தில் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவரிடம் நாசர் ஒப்படைத்தார். இந்நிலையில் தேர்தல் அதிகாரி பத்மநாபன், வரும் ஜூன் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று நேற்று அறிவித்தார்.
சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களை எதிர்த்து யார், யார் போட்டியிடுகிறார்கள் என்று ஓரிரு நாளில் தெரியவரும்.