டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நரேந்திர மோடியுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், 2வது முறையாக பிரதமர் பதவியை மோடி ஏற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலத் திட்டங்களை சரியாக கொண்டு சேர்க்காத அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக இருக்கும் அதில் பாஜகவிற்கு கூடுதல் இடங்கள் தந்த மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வான ஒரே எம்பியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமுமான ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் தனது ஆதரவாளரான மாநிலங்களை உறுப்பினர் வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி பெற முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதனிடையே நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட அருண் ஜேட்லி அமைச்சர் பதவியே வேண்டாம் என்று கூறி விட்டதால், நிதியமைசராக யாரை நியமிப்பது என்று அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அமேதியில் ராகுலை வீழ்த்திய ஸ்மிருதி ராணி மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அதிக இடங்களை பெற்றுக் கொடுத்த முகுல் ராய் போன்றோருக்கு முக்கிய பதவி கொடுக்கப்ட உள்ளதாகவும் தெரிகிறது. பிரதமர் மோடியுடன் 60-70 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்று 3 மணி நேரம் மோடியுடன் ஆலோசனை நடத்திய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடியுடன் இன்றும் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 2 அமைச்சர்கள் பதவியும், அகாலி தால்,அப்னா தால் உள்ளிட்ட கட்சிகளுக்கு 1 அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய இணை அமைச்சராக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் பதவி ஏற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரவீந்திரநாத்குமாருக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது.