கீர்த்தி சுரேஷ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். கடும் டயட், உடற்பயிற்சிகள் ெசய்து ஸ்லிம் உடலுக்கு மாறி தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டும் உள்ளார். விரைவில் இந்தி படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார்.
இதற்காகவே இந்த புது தோற்றத்துக்கு மாறியிருப்பதாக தெரிகிறது. அந்த படம் முடியும் வரை, தமிழ், தெலுங்கில் வேறு படங்களில் அவர் நடிக்க மாட்டாராம். இந்தி படத்தை முடித்த பிறகே தனது பழைய தோற்றத்துக்கு மாற அவர் முடிவு செய்திருக்கிறார்.
————-
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா பயோபிக், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று ஆகிய படங்களுக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து 13 வருடங்களாகி விட்டது. 72 படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். நான் நடிக்கும் படங்களுக்கும், மற்ற படங்களுக்கும் இசை அமைத்து வருகிறேன். நான் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில், ஐங்கரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகிறது.
இசை அமைக்கவும், நடிக்கவும் அதிக சம்பளம் கேட்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. என் உயரம் என்னவென்று தெரியும். நடிப்பதும், இசை அமைப்பதும் பணத்துக்காக மட்டுமல்ல. எனக்கு பெரிய பணத்தேவையும் கிடையாது. மக்கள் விரும்பும் இசையையும், நல்ல படங்களையும் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இப்போது மக்களுக்காக பணியாற்றும் சாதனையாளர்களை பேட்டி எடுத்து, ‘மகத்தான மனிதர்கள்’ என்ற பெயரில் யுடியூப்பில் வெளியிட்டு வருகிறேன்.
————-
சிறு இடைவெளிக்கு பிறகு ஜீவன் நடிக்கும் படம் அசரீரி. புதுமுக இயக்குனர் ஜி.கே. இயக்குகிறார். அவர் கூறும்போது, ‘அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும்.
அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது இந்த படம்’ என்றார்.