முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று (03) பிற்பகல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற, சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தையை அடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இதனை அறிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹகீம்,
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான காரணம், இந்நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை மீண்டும் நிலைநாட்டி, நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை மற்றும் அதற்கு காரணமாக அமைந்துள்ள சக்திகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
குறித்த விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து, ஏதேனும் குற்றச்சாட்டு காணப்படுமாயின் அவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கி அவை தொடர்பில் முடிவெடுக்க வேண்டுமென தாங்கள் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
நாம் இந்நாட்டை விரும்புபவர்கள், இந் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக எமது மக்களும் நாமும் உச்ச ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். பல்வேறு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் அமைதியான முறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்ற நிலையிலும் அடிக்கடி வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் செயற்படுகின்ற விதம் தொடர்பில் நாம் வெறுப்படைந்துள்ளோம் என சுட்டிக் காட்டினார்.
நாம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய போதிலும் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களாக அமரப் போவதாக தெரிவித்ததோடு, இவ் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முன்னிற்போம் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறே, நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு இவ்வரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
நேற்றும் இன்றும் இந்நாட்டில் இடம்பெற்ற ஒரு சில நிகழ்வுகள் எமது மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு குறிப்பிட்ட சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டினால் முழு முஸ்லிம் சமூகமும் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், தலைவர்கள் எனும் வகையில் நாமும் குற்றவாளியாக்கப்பட்டுள்ளோம் என்பதில் எமக்கு மன வருத்தம் இல்லை.
குற்றச்சாட்டுகள் யார் மீது முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் நம்பவில்லை.
கபீர் ஹஷீம்
முஸ்லிம்களாகிய நாம் அமைச்சு பதவிகளில் இருப்பதால், ஏதேனும் அழுத்தங்கள் ஏற்படுவதாக இருக்குமானால் நாம் எமது பதவிகளிலிருந்து விலகி, பொலிசார், இராணுவம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடியுமான அளவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்தார்.
குற்றங்களுடன் தொடர்புடையோர் யாரேனும் இருப்பார்களாயின், அவர்கள் எவ்வாறான பலம் பொருந்தியவர்களாயினும் அவர்களை சட்டத்தை நிலைநாட்டுவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்தி தருகின்றோம் அது எமது கடமையுமாகும் என தெரிவித்தார்.
இப்பிரச்சினை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தில் (கேகாலை) இருந்து ஆரம்பமானது. எனது ஒருங்கிணைப்பு செயலாளரான தஸ்லீம் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாதிகளுக்கு எதிராக புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கி, குற்றப் புலனாய்வு திணைக்களத்துடன் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, காயமடைந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதிகள் உருவாகுவதற்கு காரணம் ஏதும் இருப்பின் அதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆராய வேண்டும். நாம் அதற்கு நடவடிக்கை எடுத்தோம். முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இல்லை என்று சொல்ல முடியாது. நாம் வேறு வேறு கட்சிகளில் இருப்பவர்களாக இருக்கலாம்; வெவ்வேறு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கலாம். ஆனால் இந்நாடு என்பது முதன்மையான விடயமாகும்.
இராஜினாமா செய்த அமைச்சர்கள்
ரஊப் ஹகீம்
நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
கபீர் ஹஷீம்
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
ரிஷாட் பதியுதீன்
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்
அப்துல் ஹலீம்
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்
இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர்கள்
பைசல் காசிம்
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
எச்.எம்.எம். ஹரீஸ்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
செயிட் அலி ஸாஹிர் மௌலானா
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
அமீர் அலி
கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்
இராஜினாமா செய்த பிரதி அமைச்சர்கள்
அப்துல்லாஹ் மஹ்ரூப்
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர்
———–
மேல் மாகாண சபை ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
———–
நாட்டினுள் ஒருபோதும் எந்த வகையிலும் பிரிவினை இருக்கக் கூடாது என்று இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
வௌிநாட்டுக்கு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய போது இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்தது, துரதிஷ்டவசமான சம்பவம் என்றும், ஒருபோதும் இன மத அடிப்படையில் பிரிவினை இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அவருக்கு எதிராக மாத்திரமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த நபரின் இனத்திற்கே நடவடிக்கை எடுப்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாட்டினுள் புதிய பிரச்சினைகள் தோன்றும் என்றும் இது சம்பந்தமாக புத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
—————
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’. முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.