பயங்கரவாதிகளுக்கு நான் உதவியிருந்தால் நாட்டின் உயர் தண்டனையான மரண தண்டனையை எனக்கு வழங்குங்கள். ஆனால், என்னைச் சாட்டி எனது சமூகத்தை பழி தீர்க்காதீர்கள் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடுபவர்களைத் தண்டியுங்கள் அவர்கள் எந்த மதம் எந்த இனம் எனப் பார்க்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தைக் காட்டித் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிலர் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இச்சந்தர்ப்பத்தில் அனைவரும் நிதானமாக நடந்து கொள்வது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில். பயங்கரவாதத்துடன் எனக்கு அணுவளவும் சம்பந்தம் கிடையாது. அவ்வாறானால், ஊடகங்கள் சில தெரிவிப்பதை விடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யுங்கள்.
விசாரணைக்கு செல்ல நான் தயாராக உள்ளேன் நான் குற்றம் இழைத்திருந்தால் எந்த ஒரு தண்டனைக்கும் நான் தயாராக உள்ளேன். இந்த நிலையில், உண்மை நிலவரங்களை கண்டறிந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு உள்ளது அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
முஸ்லிம் மக்களாகிய நாம் சகல மக்களுடனும் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றோம்.எவருக்கும் பயந்து எமது அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவில்லை. நாட்டுக்காக நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் பதவிகளை இராஜினாமா செய்தோம். நாடு அழிந்து விடக் கூடாது என்பதே எமது நோக்கம்.
நாட்டின் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஐ.எஸ்.ஐ.ஸ் பயங்கரவாதிகள் இங்கு வந்துவிடக்கூடாது, நாடு அழிந்துவிடக்கூடாது, இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமான நாடு இங்கு நாம் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்கின்றோம். நாட்டில் வன்முறைகள் இடம்பெற்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று அமைதியற்ற சூழ்நிலை காணப்படுமானால், எந்த ஓர் உல்லாசப் பிரயாணியும் இலங்கைக்கு வர மாட்டார் அது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பாக அமையும். முஸ்லிம் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என சில தரப்பினர் கூறி வருகின்றனர். நாம் முஸ்லிம் நாடுகளில் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த நாட்டில் எம்மால் வாழ முடியுமா?
சில மதத் தலைவர்களின் பேச்சுகள் மிக மோசமாக உள்ளன. இனங்களுக்கிடையில் முறுகல் நிலையையும் பிளவுகளையும் தோற்றுவிப்பதற்காக சதி செய்யும் கூட்டம் தொடர்பில் ஏன் எவரும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு பௌத்த பிக்கு கண்டியில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கையில் அதனை வைத்து சில சக்திகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன.
தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டை 83 போல் ஆக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். எனினும், பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் இதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவா நாட்டிலுள்ள சட்டம் என கேட்க விரும்புகின்றேன்.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட அந்தப் பயங்கரவாதிகளைக் கைது செய்யுங்கள். அவர்களைத் தண்டியுங்கள். அப்பாவி முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்கும் இந்நாட்களில் அவர்களைத் தண்டிக்காதீர்கள். குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருபத்தொரு நாட்கள் கழிந்து வன்முறைகள் வெடித்தன. தயவுசெய்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் முஸ்லிம் மக்களையும் சம்பந்தப்படுத்தாதீர்கள். 54 முஸ்லிம் நாடுகளை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவர்களே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்.
இஸ்லாம் என்பது மனித உயிர்களை மதிக்கின்ற மதம், படுகொலைகளை எதிர்க்கின்ற மதம். ஓர் உயிரைக் கூட எவரும் அழிப்பதற்கு உரிமையில்லை என உபதேசம் செய்கின்ற மதம் அது.
தற்கொலைக் குண்டுதாரிகளையோ குண்டுத் தாக்குதல்களையோ சொத்துக்களை அபகரிப்பதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தம்மை பக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு பயங்கரவாத கூட்டமே மினுவாங்கொடை, சிலாபம் என நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வர்த்தக நிலையங்களையும் பள்ளிவாசல்களையும் வீடுகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
கொற்றாமுள்ள என்ற இடத்தில் நோன்பாளி ஒருவரை தாக்கி கொலை செய்து அவரது வாகனத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். சிறுசிறு சம்பவங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். எனினும், மினுவாங்கொடை போன்ற பிரதேசத்தில் சொத்துக்களையும் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் அடித்து நொறுக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எமது மக்கள் நூற்றுக்கணக்கில் இந்த நோன்பு காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் நாட்டின் சட்டமா? பயங்கரவாதிகளைக் காட்டிக்கொடுத்துப் பயங்கரவாதிகள் தம்மை காப்பாற்றுமாறு கோரி பல இலட்சம் ரூபாய் பணத்தை வீசிய போதும் அதற்கு ஒத்துழைக்காமல் அனைவரையும் காட்டிக் கொடுத்தவர்கள் எமது முஸ்லிம் மக்கள். எமது மக்கள், எமது உலமாக்கள் உட்பட நாம் ஒரு கட்டுப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.