ஆந்திரப்பிரதேசத்தில் 5 பேர் துணை முதல்வர்களாக நாளை பதவி ஏற்கவுள்ளதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அமராவதியில் நாளை நடைபெறும் விழாவில் 5 துணை முதல்வர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று விஜயவாடாவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 பேரை துணை முதல்வர்களாகவும் 25 பேரை அமைச்சர்களாகவும் 2.5 ஆண்டுகளுக்கு நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. சாதிக்கு ஒருவர் வீதம் துணை முதல்வர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி பகிர்ந்து அளித்துள்ளார்.
பட்டியல் இனத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், காப்பு சமூகம் ஆகியோருக்கு தலா ஒரு துணை முதலமைச்சர் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் தமது அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.அமராவதியில் நாளை காலை 9.50 மணிக்கு நடைபெறும் விழாவில் 5 துணை முதல்வர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.