ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அடுத்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அடுத்த கட்டமாக ஆட்சி அதிகாரத்தினை தன்வசம் வைத்துக்கொள்வதற்கு மும்முனை நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
முதலாவதாக, பொதுஜன முன்னணியுடன் கூட்டணியொன்றை அமைப்பதென்றால் பொதுவேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரி அணியினர் வலியுறுத்தி வந்தபோதும் பொதுஜன முன்னணியில் அதற்கான எந்தவிதமான இணக்கமும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகிவிட்ட நிலையிலும் சிங்கப்பூரிலிருந்து அவர் நாடு திரும்பியதும் உறுதியான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிய முடிகின்ற நிலையில் பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிக்கு வாய்ப்புக்களை வழங்குவது சாத்தியமில்லை.
மறுபக்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ரணில் அல்லாத ஒருவர் சபாநாயகர் கருஜெயசூரிய அல்லது, பிரதிதலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் தனது ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரி முன்வந்துள்ளதோடு இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐ.தே.மு மற்றும் சுதந்திரக்கட்சி இடையே கூட்டணி அமைத்து பிரதமர் பதவியை தான் வகிப்பது தொடர்பிலும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரியே மீண்டும் களமிறங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் சில முக்கியஸ்தர்கள் வலியுறுத்தல்களைச் செய்து வருகின்றமையால் அதற்குரிய தயார்ப்படுத்தல்களையும் அமைப்பாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.
இதேவேளை, விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னரான தகவல்களின் பிரகாரம், அரச மட்டத்தில் முக்கிய பதவியொன்றைப் பெற்றுக்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சினை தொடர்ந்தும் தன்வசம் வைத்திருக்கும் வகையிலான ஏற்பாடொன்றை மேற்கொள்வது பற்றி பொதுஜன முன்னணியினருடன் இணக்கப்பாட்டை எட்டுவது குறித்த அனுகுமுறையொன்றும் ஜனாதிபதி மைத்திரியால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு மும்முனைகளில் அடுத்த ஆட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருகின்றபோதும் நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆண்டின் ஈற்றில் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால் நாட்டில் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் நாட்டின் எதிர்காலத்திற்காக மகாசங்கத்தினரும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வெண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.