முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அமைச்சர்கள் இராஜினாமா என்பதே தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வரும் விடயமாக உள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை நாட்டில் தற்போது காணப்படுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அண்மையில் எடுத்த அரசியல் தீர்மானம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த முடிவின் பாரதுரத்தன்மை அதன் விளைவுகள் எதிர்கால நகர்வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேசரி சார்பில் சந்தித்து கலந்துரையாடினோம். அதன்படி எமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு
Q:ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர் களும் அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கமாட்டீர்கள் என்று வரலாற்றில் எப்போதாவது எண்ணியதுண்டா?
பதில்: இவ்வாறான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் அமைச்சர் பதவியில் இல்லாது விட்டாலும் கூட தலைவர்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலே மிக ஆர்வமாக மக்கள் இருந்தனர். அந்தப் பின்னணியிலேயே ஏற்பட்டிருந்த நெருக்கடிமிக்க சூழலில் சகல தரப்பினருக்கும் ஒரு செய்தியை கூறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த அமைச்சர்களுடைய இராஜினாமா மற்றும் அமைச்சர்கள் அல்லாத அனைத்து முஸ்லிம் எம்.பி. க்களையும் ஒன்றிணைத்த இந்த செயற்பாடுகள் நாட்டின் அரசியலில் புதிய மற்றும் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மிக பக்குவமாக நேர்மையாக சமூகம் எதிர்பார்த்திருந்த நோக்கங்களுக்காக ஒற்றுமையாக பயன்படுத்துவது எங்கள் மீது இருக்கின்ற மிகப்பெரிய தார்மீக பொறுப்பாகும்.
Q:பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் அரச இயந்திரத்தில் அனைத்து சமூகங்களும் பங்கெடுக்கவேண்டும். உங்கள் இந்த முடிவின் ஊடாக அரச இயந்திரத்தில் இருந்து விலகியுள்ளீர்கள். தார்மீக ரீதியில் இது எந்தளவு தூரம் சரியானது?
பதில்: இது ஏன் தார்மீகமாகக்கூடாது என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். தார்மீகம் என்பது அரசியல் நேர்மையை பொறுத்த விடயமாகும். என்னைப் பொறுத்தவரையில் இதனைவிடவும் அரசியல் நேர்மை வேறு எந்த அடிப்படையிலும் இருக்க முடியாது. இன்று நிறைவேற்றுத்துறையில் எமது பங்களிப்பு இல்லை என்பதற்காக இந்த கட்டத்திலேயே முஸ்லிம் சமூகம் தனது வலுவை இழந்துவிட்டது என்று யாரும் பேச முடியாது. காரணம் பாராளுமன்றத்தில் 21 எம்.பி. க்களின் பலம் என்பது அமைச்சரவையில் இருக்கின்ற நான்கு உறுப்பினர்களையும் மிகைத்த பலமாகும். எனவே இந்த சமூகத்தின் விடிவுக்கான போராட்டத்தில் இதனைவிடவும் சிறந்த மாற்றுவழி இருக்க முடியாது. ஆனால் இதனை லாவகமாகவும் நேர்மையாகவும் நாங்கள் பயன்படுத்தவேண்டும். இதனால் ஏற்படுகின்ற தாக்கத்தை எங்களுக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை நாங்கள் களத்துக்கு கொண்டு வந்து பலவீனப்படுத்திவிடக்கூடாது.
Q: 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூக தலைவர்களில் மூவரின் மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்காக ஏன் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகவேண்டும்?
பதில்: உலகிலே இருக்கின்ற ஜனநாயகம் நிலவுகின்ற நாடுகளிலே இப்போது இலங்கை ஒரு விசித்திரமான நாடாக உருவெடுத்துவருகின்றது. எடுத்த எடுப்பில் யாரும் யார் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம். குற்றச்சாட்டுக்களை ஊடக பரிவாரங்களுடன் சென்று பொலிஸ் தலைமையகத்திலும் ஊழல் விசாரணை அலுவலகத்திலும் கொடுக்கலாம். ஆனால் வெறும் கடித தலைப்புக்களுடன் முறைப்பாடுகளை கொடுத்தால் போதாது. முறைப்பாடுகளை நிரூபிக்கவேண்டும். இந்த விடயத்தில் இலங்கையில் விசித்திரமான புதிய நடைமுறையை பார்க்கின்றோம். முதலில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டுக்கு ஒருவரை கைது செய்வார்கள். அதன்பின்னர் அந்தக் குற்றச்சாட்டை விட்டுவிட்டு இன்னாரை நாங்கள் கைது செய்துள்ளோம். இவருக்கு எதிராக வேறு ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் வந்து முறையிடுங்கள் என்று அறிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் ஆளுநர்களுக்கும் இதே நிலைதான். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்து ஊடகங்களின் ஆதரவுடன் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக சித்தரிக்க முயல்வது அபத்தமான நடவடிக்கையாகும். போதுமான காரணங்களை காட்டி அதனை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்த நேர்மையீனமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற சூழலில் மற்றும் இந்த விசித்திரமான நிலைமையில் நாங்கள் அமைச்சர்களாக இருப்பது என்பது எங்களுடைய சுயமரியாதைக்கு ஒரு கேடு என்பதால் நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பலமான செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் கூறவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். தடிெயடுத்தவர்களுக்கு எல்லாம் வேட்டையாடுவதற்கு இடமளிக்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது. இது ஆபத்தானது.
Q: பதவி துறந்து சில நாட்கள் ஆகிவிட்டன. இக்காலப் பகுதியிலும் அரசியலிலும் மக்களிடமும் பிரதிபலிப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: இதற்கு பலத்த வரவேற்பு உள்ளது. முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதவர்களில் கூட ஒரு சாரார் வியப்புடன் பார்க்கின்றனர். ஒரு சாரார் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். விசனத்துடன் உள்ளவர்கள் இது ஒரு துணிச்சலான நடவடிக்கை மட்டுமல்ல அடுத்து நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்று விசனத்துடன் இருக்கின்றார்கள். அதிர்ச்சியில் உள்ளவர்கள் இந்த நாட்டில் பாரிய எதிர்வினையை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று பீதியில் இருக்கின்றனர். இதனைவிடுத்து பௌத்த மகா பீடங்கள் இந்த விடயம் குறித்து தங்கள் அவதானத்தை செலுத்தியுள்ளன . இவை எல்லாம் வெவ்வேறு வழிகளில் இந்த முடிவுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்றுதான் நாங்கள் கூறவேண்டும்.
Q: அப்படியானால் அடுத்து என்ன செய்யப்போகின்றீர்கள்?
பதில்: நாங்கள் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூடி அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஒழுங்குபடுத்தலை தயாரித்துள்ளோம். கூட்டாக இன்று தொடக்கம் (நேற்று) நாட்டின் முக்கிய தலைமைகளை தனித்தனியாக சந்திக்கவுள்ளோம். இதற்கு அப்பால் சிவில் சமூக அமைப்புக்களையும் தொழில்துறை சார்ந்த அமைப்புக்களையும் சமய தலைமைகளையும் சந்திக்கவுள்ளோம். தொடர்ச்சியாக இந்த செயற்பாட்டுக்காக அடுத்த ஒரு மாத காலத்தை செலவழிக்கவுள்ளோம். வெ ளிநாட்டு இராஜதந்திரிகளையும் குழுவாகவும் தனியாகவும் சந்திக்கவுள்ளோம்.
Q: முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சரவையில் இணையப்போவதை தீர்மானிக்கும் காரணி என்ன?
பதில்: அமைச்சரவையில் இணைவதற்கான எந்த அவசரமும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கிடையாது. நாங்கள் எந்த நோக்கத்துக்காக கூட்டாக ஒரு முடிவு எடுத்தோமோ அந்த நோக்கங்கள் நிறைவேறுகின்ற உத்தரவாதம் எங்களுக்கு வேண்டும். அது கண்கூடாகத் தெரியவேண்டும். அதற்கான அத்தாட்சிகள் சரிவர அமைவது அவசியம். அந்தக் கட்டத்தில்தான் எங்களுடைய மீளிணைவு என்பது நியாயப்படுத்தப்படலாம். என்னை பொறுத்தவரையில் மீதமிருக்கின்ற இந்த சில மாதங்களுக்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளுக்கு தவித்துக்கொண்டிருப்பவர்களாக எங்களை ஆக்கிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
Q:நான்கு பௌத்த பீடங்களும் முஸ்லிம்கள் மீண்டும் அரச இயந்திரத்தில் இணைந்துகொள்ளவேண்டும் என்று கோரியுள்ளன. இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: நாங்கள் எடுத்த நடவடிக்கையின் பின்விளைவாக இந்த கோரிக்கை வந்துள்ளது. பௌத்த பீடங்கள் மற்றும் அவற்றின் செயற்குழு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளன. இந்த நாட்டில் உள்ள சகல இனவாத சக்திகளுக்கும் இது ஒரு பலத்த அடி என்பதனை நான் கூறியுள்ளேன். அவர்களை பொறுத்தமட்டில் எங்கள் நடவடிக்கை இன துருவப்படுத்தலை மேலும் வலுவாக்கிவிடும் என்று அச்சம் காணப்படுகின்றது. அதனையிட்டுத்தான் இவ்வாறான வினயமான வேண்டுகோளை விடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் எங்களுடைய முடிவுகளின் பின்னணி பற்றியும் இது நாட்டின் தேசிய நலன்சார்ந்த விடயம் என்பதனையும் தனிப்பட்ட சமூகத்தின் விடிவு நோக்கிய விடயம் அல்ல என்பதனையும் எடுத்துக்கூறவிருக்கின்றோம். சட்டத்தின் ஆட்சி சரியாக நிறுவப்படவேண்டும். அதனூடாக சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கம் நிலவவேண்டும். நாட்டுக்கு எதிராகவுள்ள சர்வதேச நிலைப்பாடுகள் மாறவேண்டும். இவற்றை மிகத் தெளிவாக பௌத்த பீடங்களுக்கு எடுத்துரைக்கவிருக்கின்றோம். அவர்கள் அதை உள்வாங்கி எங்களுடைய நிலைப்பாட்டை அதன் நியாயங்களையும் புரிந்துகொள்ள நாங்கள் வழிசெய்யவேண்டும்.
Q:பௌத்த பீடங்களின் தேரர்களுடனான சந்திப்பு.
பதில்: தேரர்களை நிச்சயமாக சந்திப்போம். நாங்கள் சந்திக்கவிருக்கின்ற முக்கிய தரப்புக்களில் பௌத்த பீடங்களும் உள்ளன.
Q: இப்படியொரு கோரிக்கையை பௌத்த பீடங்களிலிருந்து நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில்: இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை வேண்டுமென்றே திணிக்கும் சில சக்திகள் அதிகமான பிரேரணைகளை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுபோட முயல்கின்றனர். நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டு அதுதான் நோய் என உறுதிப்படுத்திவிட முடியாது. இந்த அடிப்படையில் ஒருசில இனவாத, மதவாத சக்திகள் கூப்பாடு போடத்தொடங்கினார்கள். துரதிஷ்டவசமாக அரசியல் தலைமைகளும் எடுத்த எடுப்பிலேயே நடந்த இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு வழமைபோன்று உலகளாவிய மட்
டத்தில் நிலவும் இஸ்லாம் குறித்த பீதி ஒன்றை இந்த நாட்டில் உருவாக்கத் தொடங்கியுள்ளார்கள். இதற்கு நாட்டின் அரசியல் தலைமைகளும் பலிக்கடாவாகின. இந்நிலையில் அவர்களுக்கு சரியான அணுகுமுறையை தெளிவுபடுத்திக்கொண்டு வந்தோம். எனினும் நாட்டில் இயல்புநிலை, சுமுகநிலை மீண்டும் ஏற்படுவதை விரும்பாத சில சக்திகள் இனவாத, மதவாத சக்திகள் அவற்றை ஊக்குவித்த அரசியல் சக்திகள் என்பன இருந்தன. அடுத்த கட்ட அரசியலை இலகுவாக தம்வசப்படுத்த இந்த நிலைமையை ஒரு வாய்ப்பாக சிலர் பயன்படுத்தினர்.
இதற்காக இனவாத, மதவாத சக்திகள் செய்யத் துணிந்த கீழ்த்தரமான தாக்குதல்களை அவர்களுடைய காடையர் கும்பலை ஏவி மேற்கொள்ள வழிவகுத்தனர். அதேநேரம் வெளியில் இருந்து அவற்றை கண்டித்து பேசிக்கொண்டிருந்தனர். இது ஒரு துர்ப்பாக்கியமான சூழலாகும். எனினும் நாட்டு மக்கள் அதிகளவு அரசியல் முதிர்ச்சியுள்ள மக்கள். நாட்டின் ஜனநாயகமும் யார் நினைத்தாலும் குழிதோண்டிப் புதைக்க முடியாததாகும். வடக்கில் தெற்கில் ஆயுதம் தாங்கி போராடிய குழுக்கள் இருந்தன. அவற்றை ஒழுங்குபடுத்தி செய்வதற்கான கொள்கைப் பின்னணி இருந்தது. இது எதுவுமே இல்லாமல் ஒரு சிறிய கும்பல் வெளியில் உள்ள ஒரு சக்தியின் கொந்தராத்துக்காரர்களாக செய்த வேலையை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலையில் போட்டு தேங்காய் உடைக்கும் வேலையை பார்க்கும் சக்திகள் ஒருபோதும் அதில் வெற்றியடைய முடியாது.
இதில் தெளிவடையவேண்டும். பதற்றமடைந்துள்ள முஸ்லிம் சமூகம் தங்களுக்கு எதிரான ஒரு அச்ச சூழல் உருவாகி வரும்போது தலைமைகளின் ஒற்றுமை மாத்திரமே ஒரு விமோசனமாகும். இந்தப் பார்வை வலுத்துக்கொண்டு வந்தது. அதனை நாம் அவதானமாக அவதானித்து வந்தோம். எதிலும் அவசரப்படக்கூடாது. இந்தப் பின்னணியிலேயே கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளல் நாட்டின் நிலைமை குறித்து பார்த்தோம். பௌத்த மக்கள் மிகவும் மதிக்கின்ற தலதா மாளிகை முன்பாக நடந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமும் எங்களுக்கு ஒரு வழியில் நல்லசில படிப்பினைகளைத் தந்துள்ளது. அந்த 48 மணிநேரத்திற்குள் எங்களுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த தீர்மானத்தை எடுத்தோம். நோன்பு மாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு உச்சகட்டப் பொறுமை, சகிப்புத்தன்மையை போதிக்கின்ற மாதமாகும்.
Q:உங்கள் முடிவை பிரதமர் எதிர்க்கவில்லையா?
பதில்: பிரதமரை நாங்கள் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுநடத்தினோம். முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவருக்கும் தலைமைதாங்கி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி எமது நிலைப்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தினோம். சக அமைச்சர்களுடன் பிரதமரை அலரிமாளிகையில் சந்தித்தோம். நாம் சந்திப்பதற்கு முன்பதாகவே அதற்கான காரணத்தை அவருக்கு கூறியிருந்தோம். அதனால் அமைச்சரவையில் மிக முக்கியமான உறுப்பினர்களை அந்த சந்திப்புக்கு அழைத்திருந்தார். அப்போது நான் பிரதமருக்கு தெளிவான விளக்கத்தை வழங்கினேன். எமது முடிவைக் கேட்டு பிரதமர் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் செய்வது மிக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதமர் கோரினார். அங்கிருந்த ஏனைய அமைச்சர்களும் இவ்வாறான முடிவை எடுக்கவேண்டாம் எனக் கோரினார்கள். முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் வழங்க முடியும் எனக் கோரினார்கள். எனினும் அவர்களை மீறி களத்தின் நிலைவரம் மோசமாகிக்கொண்டு வந்தது.
அத்துடன் தேரர்களினால் காலக்கெடுவும் விதிக்கப்பட்டு வந்தது. இது முஸ்லிம்களுக்கு ஒரு அபாய அறிவிப்பை செய்வதாக பார்க்கப்பட்டது. அந்தப் பின்னணியில் மக்கள் மத்தியில் உள்ள பீதிக்கு தீனிபோடுகின்ற அடிப்படையில் நாட்டின் பலபகுதிகளில் கூட்டம் கூட்டமாக குண்டர்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டு வந்தது. கடைகளை மூடுமாறு சத்தமிட்டு வந்தனர்.
Q: இது நடந்தது எப்போது?
பதில்: திங்கட்கிழமை காலை தொடக்கம் நண்பகல் வரை இவை நடைபெற்றன. அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது ஏன் இவர்களை கட்டுப்படுத்த முடியாது என்று நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம். இந்த சூழல் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் நிலையைக் கொண்டிருந்தது. அதனால் நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் நாங்கள் இராஜினாமா செய்வதாக கூறினோம். இதன் ஊடாக அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது எமது நோக்கமல்ல.
அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்வதும் எமது நோக்கமல்ல. ஐ.தே.க.வின் முக்கிய அமைச்சர்களும் எம்முடன் இணைந்து இந்த முடிவை எடுத்தார்கள்.
இதுபோன்ற நடவடிக்கையின் ஊடாக மட்டுமே பாராமுகமாக இருக்கும் சக்திகளின் கண்களைத் திறக்க முடியும். அதனைத் தொடர்ந்து தயக்கத்துடன் இதற்கு இணங்கினார்கள். எமது குழுவிற்குள்ளும் சில மாற்றுக்கருத்துக்கள் தலையெடுக்க ஆரம்பித்தன.
Q:நீங்கள் பதவிக்கு கொண்டுவந்த ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து பேசினீர்களா?
பதில்: ஜனாதிபதியுடன் நேரிலும் தொலைபேசியிலும் பல தடவைகள் பேசியிருக்கின்றோம்.
Q:இந்த விவகாரம் குறித்து பேசினீர்களா?
பதில்: இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பலரும் பலவாறாக பேசியிருந்தோம். நாங்கள் பதவிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி கலகொட அத்தே ஞானசார தேரரை இவ்வாறான சந்தர்ப்பத்தில் மன்னிப்பளித்து விடுவித்ததன் விளைவு மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்ற சூழலில் அவரும் கவலையுடன்தான் இருந்தார். எங்களுக்கு எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தத் தீர்மானத்தை தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. அந்த கட்டத்தில் இது ஒரு நல்ல முடிவாகவே இருந்தது. இதற்கு அப்பாலும் பல விடயங்களை சாதிக்கக்கூடியதாக வல்லமை பொருந்தியதாக இந்த விடயம் காணப்பட்டது. இந்த ஒற்றுமையின் பலம் நேர்மையீனமாக பிரயோகிக்கப்படமாட்டாது.
– நேர்காணல் – ரொபட் அன்டனி