நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-
நீட் தேர்வோ, பள்ளி இறுதித் தேர்வோ, எந்த தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது அவர்களை சுற்றி உள்ளோரும் உணர வேண்டும். தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை ஒரு சவாலாக ஏற்று மீண்டும் முயலவும், வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தையும், ஆதரவையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்க வேண்டும்.
பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் பெற்றோர்களே முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். இது போதாது என்று அரசியல் வேறு. அரசியல் தீர்வு வரும்போது வரட்டும். அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விட வேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவை போல தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.
வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்பது யாருக்கு தெரியும். இன்று கீழே இருப்பவர்கள் நாளை மேலே செல்வர். இந்த உலகம் பரீட்சையோடு நின்றுவிடாது. எத்தனையோ சாதனைகள் உங்களுக்காக காத்து இருக்கின்றன. எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் கைவிடாதீர்கள்.
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.