நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்த சந்தோஷம் கிட்டியபோதிலும், நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது அ.தி.மு.க. தலைமையை உலுக்கியது.
மத்தியில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் அ.தி.மு.க. வுக்கு பிரதி நிதித்துவம் வழங்கப் படாததும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.வும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா திடீரென்று நேற்று முன்தினம், கட்சிக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை என்றும், இது தொண்டர்களால் இயங்கும் இயக்கம் என்றும் கூறினார்.
ராஜன் செல்லப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும், கடம்பூர் ராஜூவும் கூறினார்கள்.
இந்த நிலையில் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன், ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அ.தி. மு.க.வுக்கு சுயநலமற்ற, வலிமையான ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும், குடும்ப நலனுக்காக அல்லாமல், கட்சி நலனுக்காக செயல்படுபவர்கள் தான் தலைமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இப்படியாக 2 மாவட்ட செயலாளர்கள் திடீரென்று கட்சி தலைமைக்கு எதிராக குரல் எழுப்பி இருப்பது அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இல்லாததால்தான் இதுபோன்று எல்லோரும் தலைமையை விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர் கூறி இருக்கிறார்.
அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள போதிலும், அக்கட்சியில் குழப்பம் நிலவி வருவது உறுதியாகி உள்ளது.
போர்க்கொடி தூக்கியுள்ள 2 மாவட்ட செயலாளர்களும் மறைமுகமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளனர். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் ராஜன் செல்லப்பாவின் மகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தன் மகனின் தோல்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் தேர்தல் பணி ஆற்றாததே காரணம் என்று அவர் கருதுவதாகவும், அதனால் தான் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார் என்றும் அ.தி.மு.க.வினர் தெரிவிக்கிறார்கள்.
விரைவில் நடைபெற இருக் கும் மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. 3 எம்.பி.க் களை தேர்வு செய்ய இருக்கிறது. இதில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் போக 2 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடும். அந்த 2 இடங்களில் ஒரு இடத்தை தன் மகனுக்கு ராஜன் செல்லப்பா கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. தலைமை அதற்கு இணங்காததால்தான் ராஜன் செல்லப்பா, கட்சி தலைமை மீது விமர்சனம் வைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ் நிலையில் அ.தி.மு.க.வில் நிலவி வரும் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக்கழகத்தில் 12-ந் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு பொதுக்குழு போன்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை, நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, மத்திய மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனது ஏன்?, மாநிலங்களவை எம்.பி.க் களாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்கள் யார், யார்? என்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
மேலும் அ.தி.மு.க. பொதுக் குழுவை கூட்டுவதற்கான தேதியும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.