நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், நாடகத்துறை, திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர். கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்கள் ஏற்று நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து அவர் மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.
இவர் பணியாற்றிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும் வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றவர்.
இந்த நிலையில், நடிகர் கிரேசி மோகன் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 2 மணியளவில் அவருடைய உயிர்பிரிந்தது. இது திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.