டென்மார்க்கின் சிறந்த தமிழ் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும் சிறந்த கலைஞர் விருது பெற்றவருமான ரவிச்சந்திரன் நடராஜா அவர்கள் தனது 57 வது வயதில் சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை 11.06.2019 மாலை நெஞ்சு வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவினர் தீவிர சிகிச்சை வழங்கியும் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.
இவர் டென்மார்க்கில் தயாரான ஐந்து வரையான முழு நீள தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இளம்புயல், உயிர்வரை இனித்தாய் ஆகிய திரைப்படங்கள் தமிழகத்திலும் வெளியாகியுள்ளன. இலங்கையிலும் வெளியாகியுள்ளன.
இவருடைய பாத்திரம் கூடுதலாக போலீஸ் பாத்திரமாகவே இருக்கும், அதனால் போலீஸ் ரவி என்று அழைக்கப்பட்டு வந்தார்.
தமிழகத்தின் பிரபல நடிகர்களான சிறீமன், கருணாஸ் மற்றும் பூர்ணிதா போன்றவர்களுடன் ஈடு கொடுத்து அபாரமாக நடித்து பாராட்டுப்பெற்றவர்.
இவர் பூக்கள் திரைப்படத்தில் போலீஸ் கமிஷனரான நடித்து பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இவருடைய மகன் பிரதாப்பும் சிறந்த திரைப்பட நடிகராகும். சிறந்த நடிகர் பரிசும் பெற்றவராகும்.
போலீஸ்ரவி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவராகும். இவருடைய சிறந்த நடிப்பில் வெளியான புயலுக்கு முந்திய வானம் என்ற நாடகம் டென்மார்க்கின் சகல பாகங்களிலும் 15 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது.
பென்சனா பென்சிலீனா என்ற நாடகம் சமுதாயத்தை சீர்திருத்தும் கதையாகும், அதில் இயற்கையாக நடித்து பாராட்டு பெற்றவர். சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்தவராகும்.
90 களில் இவர் நடித்த நாடகங்கள் வாரம் தோறும் டென்மார்க்கில் எங்கோ ஓரிடத்தில் மேடையேறும் என்றளவுக்கு பரபரப்பாக நாடகத்துறையில் பணியாற்றியவர்.
டென்மார்க்கில் தயாராக இருந்த புதிய திரைப்பட மொன்றிலும், 100 பேர்வரை நடிக்கும் நாடமொன்றிலும் நடிக்க இருந்த வேளை இவருடைய பிரிவு நேர்ந்துள்ளது.
புலம் பெயர்ந்து வந்து நாடகத்திலும், திரையிலும், சமுதாய சேவையிலும் தனது வாழ்வை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திய கலைஞராகும்.
அன்னாருடைய இழப்பு பேரிழப்பாகும்.
அலைகள் மூவீஸ் அன்னாருக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் நாளை வெளியாகும்..
அலைகள் 12.06.2019