வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும்.அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பைத்தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர், வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பில் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும்.அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும்.
ஏனெனில் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் அவர்களுக்கு அங்கிகாரம் கிடைத்ததுபோலாகும். சாதாரணமாக செயற்பட்டுவந்த இவர்கள் இதன் பின்னர் தீவிரமாக செயற்படலாம். ஆளுநரின் நடவடிக்கையானது அவர்களை மேலும் பலமடையசெய்வதாகும். இதனை அவர் செய்யக்கூடாது.
எனவே ஆயுத குழுவான ஆவாகுழுவை பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதன் மூலமே பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். மாறாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதானது மேலும் அவர்களை பலப்படுத்தவதாக அமையும் என்றார்.