டெல்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது கூறியதாவது;-
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.6,000 கோடி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்.
ஆனைகட்டி குடிநீர் திட்டத்திற்கு தேவையான ரூ.17 ஆயிரத்து 600 கோடி நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும்
கோதாவரி – கிருஷ்ணா காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஸ்வச் பாரத் திட்டத்தை போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என துணை முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.