முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மதநில மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நேற்று இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
08 தமிழர்கள் மற்றும் 02 சிங்களவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதுடன், அதில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005-2015ம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்பதால் அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக 03 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தமை கூறத்தக்கது.
——
நேற்று (26) காலை 10 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தில் இடம்பெற்ற சில கூட்டணி கட்சிகளுக்கான சந்திப்பு வெற்றிகரமாகவும் நம்பிக்கை ஊட்டத்தக்கதாகவும் இருந்தததாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் நானும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, கம்பன்பில ஆகிய நால்வரும் கலந்து கொண்டோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அது மட்டுமின்றி இன்றைய சூழலில், தமிழ் மக்களின் ஆதரவு முக்கியமானது என்பது சம்பந்தமாகவும், வன்னி மாவட் தமிழ் மக்களின் நலன் கருதியும் ஆராயப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆடி மாதத்தில் அறிவிப்பது பிழையானது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆடி மாதம் முடிவுற்றதும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாம் வேட்பாளரை அறிவிக்க இருப்பதாகவும் வேட்பாளரை ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலிலே இணைந்து போட்டியிட்டாலும் எவ்வித கூட்டணி உடன்பாடும் இல்லாமலே இத்தேர்தலை தாம் சந்தித்ததாகவும் இதனால் தமது கட்சி சார்பாக போட்டியிட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மூன்று முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்கள்.
ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு தாங்கள் ஆதரவளிப்பதற்கு முன்பு ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் நால்வரும் முன்னாள் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை கொடுத்தோம். இதனை ஏற்றுக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி 29 ஆம் திகதி மாலை கட்சி தலைவர்களுடனான கூட்டத்தை ஏற்படுத்தி புதிய கூட்டணி அமைப்பது சம்பந்தமான முடிவினை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதேநேரம் இன்றைய ஜனாதிபதி நீதிமன்றத்தின் ஊடாக தமது பதவி காலத்தினை அதிகரிக்க முற்படுவதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை முன்னெடுக்க திட்டமிடப்படுவதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதேபோல் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்குப் பின் தமிழ் மக்கள் தம்மை ஆதரிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்றும் அது சம்பந்தமாக தமிழ், கத்தோலிக்க, இந்து நிறுவனங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இன்று இந்து, பௌத்த மதத்தை சார்ந்தவர்களின் ஒற்றுமையை தான் வரவேற்பதாகவும் அதே நேரம் அப்பாவி முஸ்லிம் மக்களை தாம் அரவணைத்து செல்வதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மனந்திறந்து மேலும் தமிழ் மக்கள் சார்பான பல விடயங்களையும் தெரிவித்திருந்தார். அவற்றை மிக விரைவில் ஊடகசந்திப்பின் ஊடாக தெரிவிப்பேன் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.