நான்கு கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) அறிவித்தார்.
தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியையும் குறித்து அனுப்பியிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நால்வருக்கே மரண தண்டனை நிறைவேற்றப் படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுபற்றிக் கைதிகளுக்கோ அவர்களின் உறவினர்களுக்கோ இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்தால், மேன்முறையீடு செய்யக்கூடும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று கூறினார்.
“இன்று (நேற்று) சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் இந்தச் செய்தியைக் கூறுகிறேன். கடந்த 23ஆம் திகதி முதல்
போதையொழிப்பு வாரத்தை அனுஷ்டித்து வருகிறோம். மூன்றாவது நாள் வைபவம் இன்று (27) நடைபெறுகிறது. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நிறைவுநாள் வைபவம் நடை பெறவுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்பாடு செய்து களியாட்டம் நடத்துகிறார்கள். அங்கு அழைக்கப்படும் பெண்களுக்கு மயக்க மாத்திரை கலந்து வரவேற்பு பானம் வழங்குகிறார்கள். அதனை அருந்தியதும் என்ன நடந்ததென்றே அவர்களுக்குத் தெரியாது. இன்று பல்கலைக்கழகங்களைப் போதைப்பொருள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவியிருக்கிறது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் மூன்று இலட்சம்பேர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் சொன்னார்.
இலங்கையில் உள்ள சிறைகளில் 11ஆயிரம்பேர் மட்டுமே தங்க முடியும்.ஆனால், 24ஆயிரம் பேர் அங்கு உள்ளனர். இவர்களுள் வீதமானோர் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.