உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட தேடுதல்களில் இதுவரை 2389 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகப் பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமஹா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இத் தகவலை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கைதுசெய்யப்பட்டவர்களில் 236பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன், 189பேர் தடுப்புக் கட்டளையின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் அவசரகாலச் சட்டத்தின் கீழும், 186பேர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள 425பேரில் 263பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான பின்னணி காணப்படுகிறது. 99பேருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது. 42பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், 7பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டியில் 89பேரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 29பேரும், கொழும்பு குற்றவியல் பிரிவில் 29பேரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
பிரதான சந்தேகநபர்கள் சகலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளைத் தொடர்ந்து நடத்துவதுடன், தகவல்கள் சேகரிக்கப்படுவது அவசியமானதாகும்.சஹ்ரானின் போதனைகளை பின்பற்றிய 51பேர் கைதுசெய்யப்பட்டள்ளனர். இவர்களுக்கு எதிராக எந்தச் சட்டத்தின் கீழும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. அதேநேரம் அவர்களை என்ன அடிப்படையில் விடுவிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிப்பதா என்பது பற்றி கவனம் செலுத்தப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியும். கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம் இனத்தவர்கள். இவர்களை பிடிக்க உதவியதும் முஸ்லிம் சமூகத்தினராகும்.
அதேநேரம், இனவாத கலவரங்கள் தொடர்பில் 151பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் காணப்பட்ட குழப்ப நிலைமைய பயன்படுத்தி அரசியல் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள்.
இதனூடாக ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். பாடசாலைகளுக்கு பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கும்போது தேவையான பொலிஸார் இல்லை.
அவகாரச்சட்டத்தின் கீழ் பாடசாலைகளின் பாதுகாப்புக்குத் தேவையான இராணுவத்தினரைப் பெற்றுக் கொடுக்க முடியும். தற்கு அவரசகாலச் சட்டம் நீக்கடிக்கப்பட வேண்டும் என்றார்.