33 ஆண்டுகால காவல்துறை பணியில் இருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன் என்று ஓய்வு பெற்ற டி.கே.ராஜேந்திரன் கூறினார்.
டிஜிபியாக ஓய்வு பெற்ற டி.கே.ராஜேந்திரனுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழாவும், போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு காவல்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழு, நீலகிரி அணி ஆகிய 5 கமாண்டோ படை சார்பில் அணி வகுப்பு நடைபெற்றது. 5 கமாண்டோ படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஓய்வுபெற்ற டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஏற்றுக்கொண்டார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழாவில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் பேசியதாவது:-
சட்டப்படி செயல்பட்டேன். 33 ஆண்டுகால காவல்துறை பணியில் இருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழக காவல்துறை கடுமையான சோதனைகள், சவால்களை சந்தித்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஓகி, கஜா புயல், தேர்தல் என பல்வேறு சவால்களை சந்தித்துள்ளோம்.
மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு தொடங்கி உள்ளோம்.
ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி. வெற்றிக்கு காரணம் நான் மட்டுமல்ல காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் தான். காவலர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துள்ளேன். எனது காவல்துறை பணி நிறைவுக்கு வந்த அதிகாரிகளுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.