இந்த உலகம் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பில்லியன் டன் நகர்ப்புறக் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. ஒலிம்பிக்கில் பயன்படுத்தபடும் நீச்சல் குளங்களை ஒப்பிட்டால் இந்த குப்பைகளை வைத்து 8 லட்சம் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும்.
மக்கள்தொகை அடிப்படையில் ஒரு நபர் எவ்வளவு குப்பைகளை கொட்டுகிறார் என்பதை பார்த்தால் அமெரிக்கர்கள் இந்த மோசமான பிரச்சனைக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றனர்.
பிளாஸ்டிக் மற்றும் உணவு உள்ளிட்ட கழிவுகளை பொறுத்தவரையில் உலகின் சராசரியை விட அமெரிக்கர்கள் மூன்று மடங்கு அதிக கழிவுகளை உற்பத்தி செய்கின்றனர்.
கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்களை பார்த்தால், அதிலும் அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை விட பின்தங்கி இருக்கின்றனர். அவர்கள் 35% திட கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர்.
ஜெர்மனி தான் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் முன்னணி நாடாக இருக்கிறது. அந்நாடு கழிவுகளில் 68% மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றது.
உலகளாவிய ஆபத்து குறித்து ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனமான வெரிஸ்க் மேப்பில்கிராஃப்ட் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.
கழிவுகள் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி என இரு குறியீடுகளை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக கிடைக்கும் தரவுகள் மற்றும் கல்வி ஆராய்ச்சிகள் ஆகியவற்றை கொண்டு இக்குறியீடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
பிளாஸ்டிக்கை பிரதானமாக கொண்ட கழிவுகளால் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துவரும் சூழலில் ஒவ்வொரு நாடும் குப்பை கழிவுகளில் எந்த அளவுக்கு பங்களிக்கின்றன என்பது குறித்து உலக அளவில் ஒட்டுமொத்த பார்வையைத் தரும் விதமாக இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
கழிவுகள் உற்பத்தி குறியீடானது பிளாஸ்டிக், உணவு, இடர்பாடு விளைவிக்கக்கூடிய பொருள்கள் நகராட்சி திடக்கழிவுகள் ஆகியவற்றின் தனி நபர் விகிதம் குறித்து விளக்குகிறது.
நகர்ப்புற திடக்கழிவுகள் என்பது நகராட்சி பணியாளர்கள் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் வணிக இடங்களில் இருந்து பெறும் குப்பை கழிவுகளை குறிக்கும்.
ஒவ்வோர் ஆண்டும் உலகம் 2.1 பில்லியன் டன் குப்பைகளை உற்பத்தி செய்கின்றது. ஆனால் இதில் 16% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 46% நிலையாக அகற்றப்படுகிறது.
இந்த பகுப்பாய்வின்படி, உலக மக்கள்தொகையில் 36% வைத்திருக்கும் சீனா மற்றும் இந்தியா ஆகியவை உலக அளவில் கழிவுகள் உற்பத்தியில் 27% பங்கு வகிக்கின்றன.
மக்கள்தொகையின் படி கணக்கிட்டால் அமெரிக்க குடிமக்கள் ஒவ்வோர் ஆண்டும் தலா 773 கிலோ குப்பைகளை உற்பத்தி செய்கின்றனர். இது சீனர்களை விட மூன்று மடங்கு அதிகம். எத்தியோப்பிய மக்களை விட ஏழு மடங்கு அதிகம்.
ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன. கழிவுகள் உற்பத்தியில் பிரிட்டன்வாசிகள் 14-வது இடத்தில் உள்ளனர். அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தலா 482 கிலோ வீட்டுக் குப்பை கழிவுகளை உற்பத்தி செய்கின்றனர்.
மறுசுழற்சி திறனை விட அதிக குப்பை உற்பத்தி செய்யும் ஒரே வளர்ந்த நாடு அமெரிக்காதான்.
´´கழிவுகள் உற்பத்தி செய்வதிலும் மறுசுழற்சி செய்வதிலும் மோசமாக செயல்படுவது அமெரிக்காவே´´ என்கிறார் இந்த ஆய்வை நடத்தியவரில் ஒருவரான நியால் ஸ்மித்.
´´அதிக வருமானம் கொண்டவர்களாக இருந்தபோதிலும் அமெரிக்கா மோசமாக செயல்படுகிறது. மறுசுழற்சி செய்வதை பொறுத்தவரையில் அரசியல் விருப்பங்களும் உள் கட்டமைப்பு வசதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க உள் கட்டமைப்புகள் மறுசுழற்சி வசதிக்கு ஏற்றதாக இல்லை என்பதை ஒவ்வோர் ஆய்விலும் நீங்கள் பார்க்கலாம்´´ என வெரிஸ்க் மேப்பில்கிராஃப்ட் சூழலியல் ஆராய்ச்சி தலைவர் வில் நிக்கோலஸ் தெரிவிக்கிறார்.
´´அமெரிக்காவின் கழிவுகளில் பெரும்பகுதியை தற்போது சீனாவுக்கு அனுப்பமுடியாத சூழல் உள்ளது. இதனால் அவை எரிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு உள் கட்டமைப்பில் அங்கே முதலீடு இல்லை.
உலக கழிவுகளை தங்களது நாட்டில் இறக்குமதி செய்வதற்கு சீனா, தாய்லாந்து, வியாட்நாம், மலேசியா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளது உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலிருந்து 69 கப்பல்களில் வந்த கழிவுகளை ஃபிலிப்பைன்ஸ் அரசு திருப்பி அனுப்பியதில் பதற்றங்கள் நிலவி வருகின்றன.
ஆசிய நாடுகள் உலகின் குப்பைத் தொட்டியாக இருக்க இனிமேலும் விரும்பவில்லை´´ என்கிறார் வில் நிக்கோல்ஸ்.
´´சீனா வளர்ந்து வரும் நடுத்தர வர்க்க மாசுபாடு அளவுகள் குறித்து அதிருப்தியில் உள்ளது. அரசியல் சூழல் காரணமாக மற்ற நாடுகளை விட இந்த விவகாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண மசோதா கொண்டுவருகிறது சீன அரசு´´ என்கிறார் வில்.
இந்த செய்திகள் இனிவரும் காலம் வணிகத்துக்கு சவாலான பயணம் காத்திருக்கலாம் என எச்சரிக்கிறது.
கழிவுகள் விஷயத்தில் அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது வெரிஸ்க் மேப்பில்கிராஃப்ட் . மேலும் தொழில் நிறுவனங்கள் இந்த விவகாரங்களை கையாள்வதில் இனி உரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கின்றன.