விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட 30 வருடகால போரின் போது கூட நாட்டை துண்டாட யாருக்கும் இடமளிக்க வில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கம் செலுத்த கூடிய அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்குமிடையிலான சந்திப்பு நேற்று எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் சோபா மற்றும் மில்லேனியம் சவால்கள் ஆகிய ஒப்பந்தங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவுபடுத்துவதற்கும், இது தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதற்கும் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.