தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அதன்படி வைகோவுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இன்று தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.