ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது

தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரினால் வெற்றிபெற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (08) தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாகவும் மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை கூட வைக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்துவிட்டு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் மக்களுக்கு நன்கு சிந்திக்கும் திறன் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

——

விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

அதன்அடிப்படையில் அவர்கள் இருவரும் கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் லைக்கப்பட்டனர்.

—–

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 நாட்களில் 1,500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில், நேற்று (08) காலை 06.00 மணி முதல் இன்று (09) காலை 06.00 மணி வரையான 24 மணி நேரத்திற்குள் போதையிலிருந்த 284 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

—–

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதால் சிறைக்கைதிகள் சிலர் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக சிறைச்சாலையிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கடண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

——

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடைகளுக்கு நேற்று(8) விநியோகிப்பதற்க்காக யாழிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகையை பத்திரிகை விநியோகஸ்தர் கொண்டுசென்ற போது ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் வீதிசோதனை சாவடியில் நின்ற படையினரால் குறித்த நபர் கொண்டு சென்ற பத்திரிகைகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் .பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவரை விசாரித்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர் .

போதைபொருள் கடத்தலில் விடுதலைபுலிகளிள் ஈடுபட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்கு தென்பகுதியை சேர்ந்த சிங்கள அரசியல் தலைவர்கள் பொன்சேகா உட்பட மறுப்பு தெரிவித்து விடுதலை புலிகள் அமைப்பு அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என கருத்து வெளியிட்டிருந்தனர் .

இதனை ஒப்பீட்டு பத்தியாக ஒரு பக்கத்தில் எழுதியுள்ளதோடு பத்திரிகையின் முதல் பக்கத்தில் “காலத்தால் உணர்த்தப்படும் வாக்கு மூலங்கள் – பக்கம் 6” என தலைப்பிட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை குறித்த பத்திரிக்கை அச்சிட்டிருந்தது.

குறித்த பத்திரிகை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு கடந்த சிலவருடங்களாக வாராந்த பத்திரிகையாக வெளிவருகிறது .

Related posts