செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்வார்கள்.
செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் ஆகும். அப்பயணம் வெற்றிகரமாக அமைந்தால், 2021-ம் ஆண்டில் அந்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பும்.