மதுவுக்கு எதிராக போராடி வரும் வழக்கறிஞர் நந்தினிக்கு குணா என்பவருடன் இன்று எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. மதுவிலக்கு எனும் கோரிக்கையோடு பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி. இதற்காகப் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். பல வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் 27ம் தேதி நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐபிசி 328ன் படி, போதைப் பொருள் விற்பது குற்றம்தானே? என்று நீதிபதியிடம் வாதாடினார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 5ம் தேதி, நந்தினிக்குத் திருமணமாகும் நிலையில் சிறைத் தண்டனைக்குள்ளானது பல இடங்களில் விவாதப் பொருளானது. நந்தினியின் கைதுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நேற்று நந்தினி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலர் குணா ஜோதிபாசுவுக்கும் இன்று கல்யாணம் நடைபெற்றுள்ளது. கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு எளிய முறையில் இருவரும் கல்யாணம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமண உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதில், இன்று இல்லற வாழ்வில் இணையும் நாங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இணைபிரியாது ஒற்றுமையுடன் வாழ்வோம் என்றும், இல்வாழ்க்கையிலும், சமுதாய வாழ்விலும் இணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியேற்று கொள்கிறோம், என்று தம்பதி இருவரும் கூட்டாக சொன்னார்கள். இவர்களின் கல்யாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.