அடுத்த ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும்”
நாட்டில் எந்த வகையான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் அரசியல் நெருக்கடிகள் உருவானாலும் நிலையான தேசிய கொள்கை காணப்படுமாயின் அது நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு :
கேள்வி:- நீங்கள் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் வடக்கில் சேவையாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
பதில்:- 1965ஆம் ஆண்டு முதல் 1972வரையிலான காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்தபோது, நான் பூநகரி மற்றும் இயக்கச்சி இராணுவ முகாம்களில் பணியாறியிருந்தேன்.
அக்காலத்தில் யுத்தம் இருக்கவில்லை. பூநகரி முகாம் சிறியவொரு தகரக்கொட்டிலாகவே இருந்தது. நாட்டின் மொத்த இராணுவ எண்ணிக்கையும் 8ஆயிரமாகவே இருந்தது. இக்காலத்தில் வெளியாரின் அத்துமீறல்களையும் கடத்தல்களையும் கட்டுப்படுத்துவதும், பொருட்கள் களவாடப்படுவதை தடுப்பதுமே எமது கடமையாக இருந்தது. அப்பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களும் நாமும் உணவுப் பொருட்களைக் கூட பரிமாற்றிக்கொள்வோம். அந்தளவுக்கு உறவுகள் இருந்தன.
கேள்வி:- சபாநாயகராக பதவி வகிக்கும் காலத்தில் நீங்கள் முகங்கொடுத்த மிகப்பெரும் சவாலாக எதனைக் கருதுகின்றீர்கள்?
பதில்:- இலங்கை பாராளுமன்றம் உலகத்தில் உன்னதமான சபைகளுள் ஒன்றாகவுள்ளது. ஆனால், ஒருசிலரின் செயற்பாடுகளால் இந்த உயரிய சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்றம் இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் நிகழ்ந்தமை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது.
அதனால் தான் எனக்கு ஜனநாயகத்தின் பக்கமாக செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இச்சமயத்தில் சபையில் மிளகாய்த் தூள் வீசப்பட்டது. எனக்கு அசிட் வீசுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கப்பால் என்னைக் கொலை செய்வதற்காக ரூபா 25 மில்லியனுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், தற்போது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, சிறுபான்மை உறுப்பினர்களை விடவும் பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகையே மிக குறைவாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுக்கு பொறுப்புக்கள் உள்ளன. சபை நடவடிக்கைகள் மக்கள் பணத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் இவ்வாறான பின்னடைவுகள் ஏற்படுகின்றபோதே மக்கள் குற்றச்சாட்டுக்களை, விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.
கேள்வி:- ஒக்டோபரில் அரசியல் புரட்சியின்போது தாங்கள் பக்கச்சார்பாக செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றனவே?
பதில்:- ஆம், 80ஆசனங்களைக் கொண்டவர்கள் 120 ஐ விடவும் ஆசனங்களை கொண்டவர்களிடத்திலிருந்து ஆட்சியை கைப்பற்ற முனைந்தபோது ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் பெரும்பான்மை தரப்பின் பக்கமாக செயற்பட வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. ஜனநாயக விழுமியங்களில் செயற்பட்டமையைதான் பக்கச்சார்பு என்று குறித்துரைக்கின்றார்கள். அவ்வாறு செயற்பட்டதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை எதிர்கால சந்ததியினரின் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற சம்பிரதாயங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- ஜனாதிபதி, பிரதமருக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துவருகின்ற நிலையில் எஞ்சிய காலப்பகுதியையாவது சுமுகமாக கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றீர்களா?
பதில்:- இரு தலைவர்களும் வெ வ்வேறு கொள்கையினைக் கொண்டிருப்பதன் காரணமாகவே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆரம்பத்திலேயே பொதுக்கொள்கையொன்றை அமைத்திருந்தால் இத்தகைய நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. ஆகவே, அடுத்து ஆட்சியில் அமரப்போகின்ற ஜனாதிபதி பொதுக்கொள்கையொன்றை உருவாக்கவேண்டும். அதன் மூலம் பலமான பொருளாதார நிலைமைகளை ஏற்படுத்துவதுடன் பிரிவினை பற்றிய சிந்தனைகள் வளராது இனங்களை ஒன்றுபடுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி:- குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய புதிய அரசியலமைப்பு பணிகள் முடங்கியமைக்கான காரணம் என்ன?
பதில்:- புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் சரியான வழியில் முன்னெடுக்கப்பட்டபோதும், பொதுஜன முன்னணி தரப்பில் உரிய ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருந்தால் அதில் வெற்றி கண்டிருக்க முடியும். ஆனால், அவ்வாறான நிலைமைகள் காணப்பட்டிருக்கவில்லை.
ஆகவே, இந்த விடயங்களையும், மாகாண சபை முறைமையில் உள்ள குறைபாடுகள், அவற்றுக்கான தேர்தல்களை முறையாக நடத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அடுத்த தலைவரின் முன்னுள்ள முக்கிய கடமையாகின்றது.
கேள்வி:- நீண்டகாலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- இப்பிரச்சினையை நான் வெளித்தோற்றத்தினை வைத்து பார்ப்பதில்லை. அடிப்படையில் நாம் அனைவரும் ஒருபுள்ளியிலிருந்தே தோற்றம் பெற்றவர்கள் என்று நினைக்கின்றேன்.
மானிட விஞ்ஞான ரீதியில் நோக்குமிடத்து இருதரப்பினரும், கொகசோயிட் என்ற மனித வர்க்கத்திற்கு உட்பட்டதாக இருப்பதோடு மொழிகளின் அடிப்படைத்தன்மைகளும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன. உதாரணமாக, சிங்கள, தமிழ் மக்கள் அம்மா என்றே அழைப்பதோடு, தமிழர்கள் அப்பா என்று கூறும்போது சிங்களவர்கள் அப்பச்சி என்றே அழைக்கின்றார்கள். இந்து மக்கள் வழிபடும் தெய்வங்களை பௌத்தர்களும் நம்பிக்கையுடன் வழிபடுகின்றார்கள்.
எமது கலாசாரத்திலும், முக்கிய பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சூரிய பகவானை முதன்மையாகக் கொண்டு கொண்டாடப்படும் தமிழ் சிங்கள புதுவருட பூஜைவழிபாடுகள், பண்பாடுகள், கலைகள் போன்றவற்றை வைத்துப்பார்க்கும் போது நாம் அனைவரும் ஓர் மனித குலத்திற்கு உட்பட்டவர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது. இந்த வரலாற்று ரீதியான மானிட விஞ்ஞானத்தினை புரிந்து கொள்வதன் ஊடாக ஒருவருக்கு ஒருவர் மத்தியில் அன்பு, கௌரவத்தினை ஏற்படுத்த முடியும். இவ்வாறு, பரந்த அளவில் சிந்திக்கும் போது ஒரே மக்கள் இனத்திற்குள் பிரிவினைவாத பிரச்சினைகள் ஏற்படுவது என்பது கேள்விக்குறியாகின்றது.
கேள்வி:- தமிழ் மக்கள் தனித்துவ அடையாளத்தினை கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- சிங்கள மக்களைப் போன்று தமிழ் மக்களுக்கும் தனித்துவமான கலாசாரம் உள்ளது. அக்கலாசார அடையாளங்களை நாம் மதிக்க வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் இலங்கை எமது தாய்நாடு என்ற உணர்வு ஏற்படுவதற்கும் அவர்கள் அனைவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது அரசியலமைப்பின் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக, வடக்கினை செழிப்பு மிக்க பூமியாக்குவதற்கு தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். எம்மைப்போலவே அவர்களுக்கும் அவர்களின் மூதாதையர்கள் தொடர்பாக, கௌரவமும் அபிமானமும் உள்ளது. எனினும் வரலாற்றினை பார்க்கின்றபோது ஓரினத்துக்கு நிகழும் அசாதாரணங்களை அரசியல் நோக்கங்களின்றி அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் தீர்த்துக்கொள்வதற்கு எமக்கு முடியாது போயுள்ளது.
கேள்வி:- அதற்காக தாங்கள் கொண்டிருக்கின்ற தனித்துவமான சிந்தனைகள் எவை?
பதில்:- எமது பாடசாலைக் காலத்தில் அனைத்தின மாணவர்களும் ஒரேபாடசாலையில் கல்வி கற்றனர். சிங்கள விளையாட்டு கழகங்களில் தமிழ் வீரர்கள் விளையாடினார்கள். அதன்மூலம் மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவம் கட்டியெழுப்பப்பட்டது. ஆகவே, ஆரம்ப பாடசாலையிலிருந்து இன உறவுக்கான புதிய கலாசாரத்தினை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனைத்து இனம், மதம் தொடர்பான தெளிவு ஏற்படும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
. இது தொடர்பான பல முக்கிய யோசனைகளை பாராளுமன்றத்தில் தேசிய, மத, நல்லிணக்கத்திற்கான நிலையான துறைசார் மேற்பார்வைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அத்துடன் இனரீதியாக குரோதங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை பிரஸ்தாபிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக வெறுப்பு பேச்சுக்களைத் தடுப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கேள்வி:- கூட்டு அரசாங்கத்தின் காரணத்தினாலேயே நாட்டில் அரசியல் நெருக்கடி நிலைமைகள் மேலெழுந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- அயல் நாடான இந்தியாவினை நோக்கும் போது கடந்த மூன்று நான்கு தசாப்த காலமாக கூட்டு அரசாங்கமே இருந்து வருகின்றது. இதில் இருபக்கங்கள் உள்ளன. எந்த வகையான அரசாங்கம் உருவானாலும், இறுதியில் தீர்மானிக்கும் சக்தியாக மக்களே உள்ளனர். அரசாங்கத்தின் முடிவைத் தீர்மானிக்க வேண்டியது மக்களிடமுள்ள ஜனநாயக உரிமைக்கான வாக்குகளே ஆகும். எந்தவகையான அரசாங்கம் உருவானாலும் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் நாடு என்ற ரீதியில் பொதுவான தேசிய கொள்கையொன்று அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது. அது அவ்வப்போது மாற்றம் அடையாது, நிலையான தேசிய கொள்கையாக இருத்தல் வேண்டும். இந்த நிலையான தேசிய கொள்கையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இவ்வாறு தேசிய கொள்கைக்குள் ஒன்றுபட முடியுமாயின் அரசியல் நெருக்கடிகள் பாதிப்புக்களை ஏற்படுத்தாது.
கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டம் பல குறைபாடுகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- ஆம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரையில் தற்காலிகமாகவே 19ஆவது திருத்தத்தினை உருவாக்கினோம். நிறைவேற்று அதிகாரத்தினை நீக்கி புதிய அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்தினை பலப்படுத்தவே முனைந்தோம். ஆனால் நிறைவேற்று அதிகாரம் மட்டும் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் நடைமுறைச்சாத்தியமாகாமையினால் தான் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன.
கேள்வி:- 19ஆவது திருத்தம் இரு அதிகார மையங்களை தோற்றுவித்துள்ளதல்லவா?
பதில்:- இரு அதிகார மையங்களும் உருவாகியுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கினால் தான் பிரச்சினைகளுக்கான தீர்வு கிட்டும்.
கேள்வி:- நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்களா?
பதில்:- ஆம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஐக்கிய தேசியக் கட்சியே அறிமுகப்படுத்தியது. இருப்பினும் அதில் பாதகமான விடயங்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை அக்கட்சியே பிற்காலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனைய அனைத்து கட்சிகளும் ஆரம்பம் முதலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான நிலைப்பாடுகளையே கொண்டிருந்தன. 1995ஆம் ஆண்டு கதிர்காமத்தில் இடம்பெற்ற ஐ.தே.கவின் கட்சி மாநாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற யோசனையை நானே முன்வைத்தேன். ஆகவே, இம்முறைமை நீக்கப்பட வேண்டும், பாராளுமன்ற ஜனநாயகத்தன்மை முழுமையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன்.
கேள்வி:- உங்களுடைய அரசியல் பயணத்தின் அடுத்தகட்டம் எப்படியிருக்கப் போகின்றது?
பதில்:- இராணுவசேவையில் இருந்த எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாலேயே அரசியலில் பிரவேசித்தேன். அந்த அடிப்படையில் எனது அரசியல் பயணத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புக்களும் இருந்திருக்கவில்லை. எதிர்காலத்திலும் இருக்கப்போவதில்லை. இலவசக்கல்வியை பெற்றமையால் அதற்கான பிரதியுபகாரமாக இயலுமான வரையில் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது பிரதான நோக்கமாக இருக்கின்றது.
நான், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிலேயே அரசியல் பிரவேசம் செய்தேன். பின்னர், கட்சியின் தவிசாளர், பிரதித்தலைவர், கொழும்பு மேயர், மேல்மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், மின்சக்தி அமைச்சர் என பல பதவிகளை வகித்தேன். இவை அனைத்துமே நான் கேட்டுப்பெற்றுக் கொண்டவை அல்ல. சுதந்திரமடைந்த பின்னர் மூவின மக்களும் அந்நியோன்யமாக வாழ்ந்ததைப் போன்றதொரு சூழல் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பமும் கனவுமாக உள்ளது.
கேள்வி:- மக்கள் சேவையை தொடர்ந்தும் விரும்பும் நீங்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டால் களமிறங்குவதற்கு தயாராகவுள்ளீர்களா?
பதில்:- எதிர்காலத்தில் என் மூலமாக சேவைகள் ஆற்றப்பட வேண்டும் என்ற நிலைமை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக முன்வைக்கப்படுகின்றபோது அதனை சீர்தூக்கி பார்க்க முடியும். அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் இணக்கத்துடன் கட்சியின் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான அனைத்து தரப்பினரும் ஏகமனதான நிலைப்பாட்டுடன் எனக்கான அழைப்பினை விடுக்கின்றபோது நாட்டில் நிலையான ஆட்சிமுறைமையை ஏற்படுத்துவதற்கான கால எல்லை வரையில் தற்காலிகமான தலைமைத்துவத்தை வகிப்பது பற்றி சிந்திக்க முடியும். அதனைவிடுத்து நானாக கோரியோ அல்லது போட்டி போட்டோ பதவியைப் பெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
கேள்வி:- எதிர்வரும் காலத்தில் தென்னிலங்கை தலைவர்கள் மீது தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் எந்த அடிப்படையில் நம்பிக்கை வைக்க முடியும்?
பதில்:- நம்பிக்கை என்பது பிரதான தேர்தல்களில் களமிறங்கும் வேட்பாளர்களைப் பொறுத்தே ஏற்படும். ஆனால் டட்லி சேனநாயக்கவின் காலத்தில் வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்றனர். அதன் பின்னர் அங்குள்ள தலைவர்கள் பிராந்திய அரசியலையே பின்பற்றி வருகின்றார்கள். இந்த நிலைமைகள் மாறவேண்டும். அவர்கள் அடுத்த ஆட்சிக்காலத்தில் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும். புத்திஜீவிகளாக இருக்கும் அவர்களின் பங்களிப்பு முழு நாட்டுக்கும் அவசியமாகின்றது. உதாரணமாக, சிரேஷ்ட உறுப்பினராக இருக்கும் சம்பந்தன் மீது நாம் அபிமானத்தினைக் கொண்டிருக்கின்றோம். அவர் போன்று வெ3வ்வேறு அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்று தம்மினத்திற்கும் முழுநாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும்.
கேள்வி:- நீங்களும் ஒரு சிங்கள, பௌத்த தலைவரா?
பதில்:- இனம், மதம் என்பன பிறப்பின் மூலமே எனக்கு கிடைத்தன. அவை நான் கேட்டுப்பெற்றுக்கொண்டவையல்ல. மனிதர் கள் ஒரே இனம் என்பதை புத்த பெருமான் போதித்துள்ளார். உண்மையான பௌத்தன் இனவாதத்தினையோ மதவாதத்தினையோ கொண்டவராக இருக்க முடியாது. நான் ஏனைய இன மதங்களுக்கு மதிப்பளிக்கும் சமத்து வத்தினை ஏற்றுக்கொள்ளும் சிங்கள பௌத்தன்.
நான் சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களையும் அதனைய டுத்து 21நாட்களின் பின்னர் அப்பாவி முஸ்லிம்
மக்களை இலக்காக கொண்டு மினுவாங் கொடையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்க ளையும் கண்டிக்கின்றேன். பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளை கண்டிப்பதைப் போன்றே 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எம் சகோதர தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கொடூரத் தாக்குதல்களையும் கண்டிக்கின்றேன்.என்னைப்
பொறுத்தவரையில் அனைத்து பிரிவினைவா திகளும் இறுதியில் மக்கள் நிம்மதியாக உயிர் வாழும் உரிமையை இழக்கச் செய்பவர்களே.
நேர்காணல்: ஆர். ராம்
வீரகேசரி