தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.டி.லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்றத்தினர் களம் இறங்கி உள்ளனரே?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்து கூறியதாவது:–
ரஜினிகாந்த் ரசிகர்கள் வேலூருக்கு செல்லட்டும். அங்கு திரையரங்குகள் அதிகம் இருக்கின்றன. ரஜினிகாந்த் படத்தை திரையிட்டு அவர்கள் பார்க்கட்டும். வேலூர் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒன்றும் நடந்து விட போவதில்லை.
சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும். எம்.ஜி.ஆருக்கு பின்னர் சினிமாவில் இருந்து யாரும் அரசியல் வானில் ஜொலிக்கவில்லை. எனவே அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம் என்று அவருடைய ரசிகனாக நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.