தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்தார்.
13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கிணங்க அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வொன்று பெற்றுக்
கொடுக்கப்படும் என்றும் அது தொடர்பில் தாம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த பல வருடங்களாக கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனினும், எதிர்வரும் 2 வருடங்களில் அந்த நோக்கத்தை நிறைவேற்றி அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்து பிரஜைகளாகப் போட்டியிட்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது. அந்நாட்டில் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறி, அவர்கள் இப்போது இங்கிலாந்து பிரஜைகளாக வாழ்கின்றனர். இதற்கிணங்க எமது நாட்டிலும் ஆயிரம் வருடங்களாக அனைத்து இனங்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் நாம் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
நாம் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதில் நெருங்கி வந்துள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அதன்மூலம் இலங்கையர் என்ற ரீதியில் நாம் பெருமையுடன் வாழக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்க முடியும்.
நாம் எந்த இனமானாலும் நாம் அனைவரும் இலங்கையர் என்ற தனித்துவத்துடன் வாழவேண்டுமென்பதே எனது விருப்பம். வடக்கு மக்களும் அதற்கிணங்க வாழ வேண்டும்.
நேற்று முன்தினம் இங்கிலாந்து ஒற்றுமையுடன் செயற்பட்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது. இங்கிலாந்துடன் நாம் நெருங்கிய தொடர்புகளைக்கொண்டுள்ளோம். இங்கிலாந்து அணியின் தலைவர் துடுப்பாட்ட வீரர் மற்றும் பந்துவீச்சாளர்கள் திறமை படைத்தவர்கள் அவர்கள் உலகளவில் தம்மை வீரர்களாக நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்.
அவ்வகையில் ஆயிரம் ஆண்டு ஐக்கியமாக வாழ்ந்த நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து வாழ்வது அவசியம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். நேற்றைய இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.