இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து வடிவேலு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்புதேவன் இயக்கத்திலும், ஷங்கர் தயாரிப்பிலும் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ல் வெளியாகி வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். படப்பிடிப்பில் வடிவேல் சில நாட்கள் பங்கேற்று நடித்த நிலையில் சிம்புதேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார்.
இதனால் தனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும், வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி படத்தில் நடிக்கும்படி வற்புறுத்தியது. அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர். 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். சமீபத்தில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. அப்போது அளித்த பேட்டியில் ஷங்கரையும், சிம்புதேவனையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் முடங்கியதால் ரூ.10 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறிவரும் ஷங்கர் கோர்ட்டில் வடிவேலு மீது வழக்கு தொடர முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து வடிவேலு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.