வடக்கு, கிழக்கில் திட்டமிட்டவகையில் பௌத்த ஆக்கிர மிப்பு இடம்பெற்று வரும் இந்த வேளையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்.டமைப்பு எம்.பி.க்கள் கலந்துகொள்ளாமை கவலையளிக்கும் விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
கன்னியா வென்னீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான எம்.பி.க்கள் சந்தித்து பேசியிருந்தனர். நேற்று முற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வியாழேந்திரன் எம்.பி. சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து. தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த முக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு, கிழக்கில் திட்டமிட்டவகையில் பௌத்த ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தவேண்டியுள்ளது. இத்தகைய முக்கிய சந்திப்பில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவரும் பங்கேற்கவில்லை.
தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாடும் போது அவர்கள் இதில் பங்கேற்கவில்லை. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோர் கூட இந்தக்கூட்டத்தில் பங்கேற்காமை கவலையளிக்கும் விடயமாகும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது சகலரும் ஒன்றுகூடி நிற்கின்றனர். கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக கைகோர்த்து நிற்கின்றனர். ஆனால் தமிழ் எம்.பி.க்களைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலை இல்லை. கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இந்த சந்திப்பில் பங்கேற்காமை கவலைக்குரிய விடயமாகும்.
இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசன் இந்து கலாசார அமைச்சராக உரிய பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். அவரது செயற்பாடு பாராட்டத்தக்கதாகும்.