கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் கன்னியா வென்னீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்தார். இதற்கென நேற்று 11 மணிக்கு விசேட கூட்டத்தையும் ஜனாதிபதி ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக்கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன் பி. திகாம்பரம், எம்.பிக்களான எம். திலகராஜ், வேலுக்குமார் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன், ஆகிய ஐவருமே கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், உட்பட கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்திருந்தார்.
கூட்டத்தில் பங்கேற்பதாக அவர்களும் அமைச்சர் மனோ கணேசனுக்கு உறுதி வழங்கியிருந்தனர். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் அழைத்துக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்பதாக சுமந்திரன் எம்.பி. உறுதி அளித்திருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் இந்தக்கூட்டத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கூட்டம் ஆரம்பித்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் வரவில்லை என்று ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியுடனான கூட்டத்தில் பங்கேற்குமாறு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட சகல தமிழ் எம்.பி.க்களுக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிலர் வெளிநாடு சென்றிருந்தமையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.