யாழ். மானிப்பாய் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்களெனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு சில வீடுகள் மீது, ஆவா குழுவினரால் தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இணுவில் வீதியில் வைத்து 03 மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேரை சோதனையிட முயற்சி செய்த வேளையில், அவர்களிடமிருந்த வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் குறித்த நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி ஏற்பட்டதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதோடு, ஏனைய ஐவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நபர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்றிரவு (20) 8.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொடிகாமம், கச்சாயை சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் எனும் 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக நால்வரும் வேறு சிலருடன் இன்று காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் கொல்லப்பட்டவருடன் கையடக்க தொலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் ஆவா குழு உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் 03 வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சடலம் தற்போது யாழ். வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்து.
குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(யாழ். விசேட நிருபர் – மயூரப்பிரியன்)