உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் செய்த பிழையை நடுவர் குமார் தர்மசேன ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் அந்த செயலுக்கு ஒருபோதும் தான் வருத்தப்பட மாட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீசிய 4 ஆவது பந்தில் பென் ஸ்டோக் 2 ஓட்டங்கள் ஓடிய போது நியூஸிலாந்து பீல்டர் மார்ட்டின் குப்தில் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்.
அந்தப் பந்து கிரீசுக்குள் விழுந்த பென் ஸ்டோக்ஸ் துடுப்பு மட்டையில் பட்டு பவுண்டரியைத் தாண்டியது. இதனால் அந்தப் பந்தில் 6 ஓட்டங்களை குமார் தர்மசேன சக நடுவருடன் கலந்தாலோசித்ததன் பின்னர் வழங்கினார்.
அந்தப் பந்தில் 5 ஓட்டங்கள் தான் வழங்கியிருக்க வேண்டும். 5 ஓட்டங்கள் வழங்கியிருந்தால் ஆட்டம் டை ஆக வாய்ப்பு இருந்திருக்காது.
இதன் பின்னர் கள நடுவர்கள் குமார் தர்மசேன(இலங்கை), மாரிஸ் (தென்னாபிரிக்கா) ஆகியோர் இந்த விடயத்தில் தவறு இழைத்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந் நிலையில் இது குறித்து தெரிவிக்கையிலேயே குமார் தர்மசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் செய்த பிழையை ஒப்புக்கொள்கிறேன். எனினும் அந்த செயலுக்கு ஒருபோதும் தான் வருத்தப்பட மாட்டேன்.
தொலைக்காட்சிகளில் ரீப்ளேகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கருத்து தெரிவிப்பது இலகுவான விடயம். இறுதிப் போட்டியில் நான் எடுத்த தீர்மானத்தில் பிழை இருப்பதை தொலைக்காட்சியூடாக பார்த்ததன் பின்னரே விளங்கிக் கொண்டேன்.
எனினும் ஆடுகளத்தில் இருக்கும்போது தொலைக்காட்சி ரீப்ளேக்களை பார்த்து நாங்கள் தீர்மானம் மேற்கொள்வதில்லை. எனவே அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவை எண்ணி ஒருபோதும் கவலையடைய மாட்டேன் என்றார்.