தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் இருவாரத்தில் அமைச்சரவைப்பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு ,அரசகருமமொழிகள்,சமூகமேம்பாடு மற்றும் இந்துமத விவகார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் முழுமையாக மேற்குகொண்டு வருவதாகவும் , இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இவ்வாறானதொரு அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய மகசின் சிறைச்சாலையில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேசவதாசனின் ஒன்பது நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று நேரில் சந்தித்து நீராகாரம் அளித்து முடித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்து கூறியதாவது ,
புதிய மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இன்றைய தினத்தில் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதாக அவருக்கு அளித்த வாக்குறுதிகளை அடுத்து தனது உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவருக்கு நீராகாரம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளேன்.
அவருடைய உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேபோல், அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.