புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் “தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகமானது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது. நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன்.
மோகன்லால் இயற்கையான நடிகர். கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும். பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த பாராட்டுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டரில், உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி; வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு இது என்று பதிவிட்டுள்ளார்.