அரசாங்கம் எம் இனத்தை அழித்தது மட்டுமல்லாது இதுவரை காலமும் ஒடுக்கிக் கொண்டு தான் வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்குள கிராமத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னியின் ஏற்பாட்டில் 36 வது ஆண்டு கறுப்பு ஜூலை நினைவு தினம் நேற்று (23) அனுஷ்டிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய உரிமை, சுயநிர்ணயம், பொருளாதாரம், அபிவிருத்திகான போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றது. சிங்கள பேரினவாத அரசு எம் இனத்தை அழித்தது மட்டுமல்லாது இதுவரை காலமும் ஒடுக்கிக் கொண்டு தான் வருகின்றது.
வட கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் அங்கீகாரம் பெற வேண்டும். அது ஒரு நாடு இரு தேசம். ஆகையால் இலங்கை என்பது ஒரு நாடு தமிழர்களுக்கு வடகிழக்கு ஒரு தேசம் என அங்கீகாரம் பெற வேண்டும்.
இந்த அங்கீகாரத்தினை பெற்றால் மாத்திரம் வட கிழக்கில் வாழும் வரை அடுத்த சந்ததியினருக்கு இவ்வாறான ஜூலை கலவரம் போன்று முள்ளிவாய்கால் முடிவு போன்று இல்லாமல் தடுக்காமல் இல்லையேல் இதுபோன்ற ஜூலைக் கலவரம், முள்ளிவாய்க்கால் கலவரம் போன்று சிங்கள பேரினவாத அரசினாலும், சிங்கள பேரினவாத காடையர்களாலும் நிகழ்த்தப்படும் என்றார்.