கர்நாடக மாநிலம் கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவி மைத்ரீ ஆகியோர் இரண்டு நாள் ஆன்மிகப் பயணமாக இந்தியா சென்றுள்ளனர்.
பிரதமர் அவருடைய மனைவியுடன் கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொல்லூரு மூகாம்பிகை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனையொட்டி, பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல காலை முதல் பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
உடுப்பி மாவட்ட ஆட்சியர் ஹெப்சிபாராணி கொரல்பட்டி மற்றும் உடுப்பி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷா ஜேம்ஸ் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
கோயிலில் வழிபட்ட பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் மங்களூருக்கு சென்றார்.
சனிக்கிழமை காலை கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்டு, மாலை இலங்கைக்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது